No results found

    ஆபாச வீடியோ விவகாரம்: துரித நடவடிக்கை எடுத்த முதலமைச்சருக்கு நன்றி... தருமபுரம் ஆதீனம் அறிக்கை


    போலி ஆபாச வீடியோ விவகாரத்தில் மிக துரிதமாக நடவடிக்கை எடுத்து எங்களையும், எங்கள் மடத்தின் பெருமையையும் காத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும், காவல்துறைக்கும் தருமபுரம் ஆதீனம் நன்றி தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக தருமபுரம் ஆதீனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த சில நாட்களாக தருமபுர மடத்தில் சில அடையாளம் தெரியாத நபர்கள் மற்றும் சில ரவுடிகள் சேர்ந்து மடத்தின் சம்பந்தமான போலியான ஆடியோ மற்றும் வீடியோ டேப்களை தயாரித்து மடத்தில் வேலை செய்பவர்களையும், மடத்தின் விசுவாசிகளையும் அணுகி மன உளைச்சலுக்கு ஆளாக்கி வந்தனர். இதை சட்டரீதியாக எதிர் கொள்ள வேண்டும் என நாங்கள் காவல்துறையை நாடினோம். காவல்துறை, மாண்புமிகு தமிழக முதல்வரின் ஆணைப்படி இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது மிக துரிதமாக சட்டப்படியான நடவடிக்கை எடுத்துள்ளது.

    எனவே, மிக துரிதமாக நடவடிக்கை எடுத்து எங்களையும், எங்கள் மடத்தின் பெருமையையும் காத்த காவல்துறைக்கு எங்கள் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கின்றோம். தருமபுர மடத்தையும், எங்களையும் ரவுகளிடமிருந்து மீட்டெடுத்த நம் தமிழ்நாடு முதல்வர் அவர்களுக்கும், எம் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

    மயிலாடுதுறையில் பழமை வாய்ந்த தருமபுரம் ஆதீன சைவ மடம் அமைந்துள்ளது. இந்த ஆதீனத்தின் 27 -வது தலைமை மடாதிபதியாக மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சாமிகளா இருந்து வருகிறார்

    இந்நிலையில், மடாதிபதியின் சகோதரரும், தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான திருக்கடையூர் தேவஸ்தானத்தின் கணக்காளராகவும் உள்ள விருத்தகிரி என்பவர் மயிலாடுதுறை காவல்நிலையத்தில் ஒரு புகார் அளித்துள்ளார்.

    அதில், தஞ்சை மாவட்டம் ஆடுதுறை சார்ந்த வினோத் என்பவரும், மடாதிபதியின் உதவியாளர் செந்தில் என்பவரும் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டும். நேரில் சந்தித்தும் ஆதீன மடாதிபதியின் ஆபாச வீடியோ, ஆடியோ தங்களிடம் இருப்பதாகவும், இதனை சமூக வலைத்தளங்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் வெளியிடாமல் இருக்க வேண்டுமென்றால் பணம் தர வேண்டும் என்றும் கூறி. கழுத்தை நெரித்து கொலை செய்ய முயற்சி செய்தார்கள்.

    இந்த சம்பவத்தில் செம்பனார்கோயிலைச் சேர்ந்த கலைமகள் கல்வி நிறுவனங்களின் தாளாளர் குடியரசு, மயிலாடுதுறை மாவட்ட பாஜக தலைவர் அகோரம், மதுரையைச் சேர்ந்த வழக்கரைஞர் ஜெயச்சந்திரன் மற்றும் செம்பனார்கோயில் திமுக மத்திய ஒன்றிய செயலாளர் அமிர்த.விஜயகுமார் ஆகியோர் தூண்டுதலாக இருந்துள்ளனர் என்று கூறியிருந்தார்.

    இந்தச்சம்பவம் தொடர்பாக சிறப்புப் படை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் சம்பவம் உண்மை என்று தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து தஞ்சை வடக்கு மாவட்ட பாஜக பொதுச் செயலாளர் ஆடுதுறை வினோத், சீர்காழி ஒன்றிய பாஜக முன்னாள் தலைவர் திருவெண்காடு விக்னேஷ், செம்பனார்கோவில் கலைமகள் கல்வி நிறுவனங்களின் தாளாளர் குடியரசு, தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் தாலுகா நெய்குப்பை கிராமத்தைச் சேர்ந்த ஸ்ரீநிவாஸ் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர்.

    அவர்களை நேற்று இரவு 10 மணியளவில் மயிலாடுதுறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவர்களை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி கலைவாணி உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து 4 பேரும் மயிலாடுதுறை கிளைச் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    Previous Next

    نموذج الاتصال