பலன்: அனைத்தும் வசமாகும்
கருத்தன எந்தை தன் கண்ணன வண்ண கனகவெற்பின்
பெருத்தன, பால் அழும் பிள்ளைக்கு நல்கின, பேரருள்கூர்
திருத்தன பாரமும், ஆரமும், செங்கை சிலையும், அம்பும்,
முருத்தன மூரலும், நீயும் அம்மே வந்து என் முன் நிற்கவே
பொருள்:
என் தந்தை சிவபெருமானின் கருத்திலும், கண்ணிலும் என்றும் நிலைத்து இருப்பது, தங்க குன்றுகள் போன்ற நின் திரு மார்பகங்கள்.
அதிலிருந்து வந்த அன்புததும்பிய அந்த முலை பாலினை, நீ அழுத பிள்ளைக்கு (சீர்காழியில், ஞானசம்பந்தருக்கு) கொடுத்தாய். உடனே அப்பிள்ளை பாடல்கள் பல புனைந்தது. அத்தகைய அருளை வழங்கியது, நின் முலைப்பால்.
உன் அன்பு அளவே இல்லாதது. அதனால் உனது மார்பகங்கள் பாரமாய் இருக்கிறது. அத்தகைய மார்பும், அதில் நீ அணியும் ஆரமும் (மாலை), உன் சிவந்த கையில் இருக்கும் வில்லும், அம்பும், உன் சிவந்த இதழில் தவழும் குறுநகையும், மொத்தத்தில் நீயும் வந்து என் முன் நிற்பாயாக.
அம்பாளின் முலைப்பால், சரஸ்வதி கடாக்ஷத்தை அளிக்கும் என்று சௌந்தர்ய லஹரியில் ஸ்ரீ ஆதி சங்கரர் கூறியுள்ளார்.
ஸ்லோகம் - 75
தவ ஸ்தன்யம் மன்யே தரணிதரகன்யே ஹ்ருதயத:
பய: பாராவார: பரிவஹதி சாரஸ்வத மிவ
தயாவத்யா தத்தம் த்ரவிடசிசு; ஆஸ்வாத்ய தவ யத்
கவீனாம் ப்ரௌடானா மஜினி கமனீய: கவயிதா
மலை அரசன் பெண்ணே, உன் முலைப்பால் உனது இதயத்திலிருந்து உதித்த
அம்ருத ப்ரவாஹம் என கருதுகிறேன். சரஸ்வதியே இவ்வுரு கொண்டு வந்தாள். ஏனென்றால், அப்பாலை அருந்தி, தென்னாட்டில் பிறந்த குழந்தை ஒன்று பாடல்கள் பல பாடி, கவிகளில் தலை சிறந்தவனாக ஆயிற்று.
பாடல் (ராகம் - தர்பார், தாளம் - ஆதி திஸ்ர நடை) கேட்க