பலன்: குடும்பக் கவலைகள் தீரும்
அறிந்தேன், எவரும் அறியா மறையை அறிந்துகொண்டு,
செறிந்தேன் நினது திருவடிக்கே திருவே, வெருவிப்
பிறிந்தேன், நின் அன்பர் பெருமை எண்ணாத கரும நெஞ்சால்,
மறிந்தே விழும் நரகுக்கு உறவாய மனிதரையே
பொருள்:
அபிராமியே, இதுநாள் வரை, எனது பழவினைகள் காரணமாக, உன் பெருமையை எண்ணி துதிக்கும் உனது அன்பர்களின் சங்கத்தை நாடவில்லை. அதனால் மீண்டும் மீண்டும் நரகத்தினுள் விழுந்து கொண்டிருந்தேன்.
இங்கு நரகம் என்பது மனித சொந்தம் கலந்த சம்சார கடலை குறிக்கிறது. அதாவது அன்னையை துதிக்காத மனிதர்கள், நரகத்திற்கு மிகவும் வேண்டியவர்கள், உறவுக்காரர்கள் என்று கொள்ள வேண்டும்.
அனால் இப்போது எவரும் அறியாத மறையினை (வேதத்தை) அறிந்து கொண்டு, அன்னையான உன்னை (அபிராமியை), அவளின் திருவடியை அடைந்தேன். அன்னையே வேதம் என்று கொள்க.
சத்சங்கம் என்பது ஒருவனுக்கு மிகவும் முக்கியம். அதுவே முக்தி அளிக்க வல்லது. இதனை ஆதி சங்கரர் தனது பஜகோவிந்தத்தில் (மோஹ முத்கரா ஸ்லோகம் என்றுதான் இதற்கு முதலில் பெயர். அதாவது, மோஹத்தை தகர்க்கக்கூடியவை), சத்சங்கத்தை பற்றி
சத்ஸங்கத்வே நிஸ்ஸங்கத்வம்
நிஸ்ஸங்கத்வே நிர்மோஹத்வம்
நிர்மோஹத்வே நிஸ்சல தத்வம்
நிஸ்சல தத்வே ஜீவன் முக்தி
என்று கூறியுள்ளார் . அதாவது, சத்சங்கம் கிடைத்தால், அவனுக்கு வேறு சங்கம் தேவையில்லை. மோஹம் அறுபடுகிறது. பின் நிலையான தத்வத்தை நாடுகிறான். அதுவே அவனுக்கு முக்தி அளிக்கிறது.
பாடல் (ராகம் - ஆரபி, தாளம் - ஆதி) கேட்க