இந்திய சந்தையில் ஆப்பிள் கிரெடிட் கார்டு சேவையை வழங்குவதற்காக இந்திய வங்கிகள் மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகளிடம் ஆப்பிள் நிறுவனம் பேச்சுவார்த்தையை துவங்கி இருப்பதாக கூறப்படுகிறது. கடந்த ஏப்ரல் மாதம் இந்தியா வந்திருந்த ஆப்பிள் தலைமை செயல் அதிகாரி டிம் குக், ஹெச்டிஎப்சி வங்கி தலைமை செயல் அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குனர் ஜகதீசனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது.
ஆப்பிள் நிறுவனம் தேசிய பேமன்ட்ஸ் கார்ப்பரேஷன் உடன் இணைந்து ஆப்பிள் பே சேவையை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. எனினும், இந்த பேச்சுவார்த்தைகள் கிரெடிட் கார்டு தொடர்பானதா அல்லது தேசிய பேமன்ட் கார்ப்பரேஷன் வழங்கி வரும் யுபிஐ சார்ந்த பேமன்ட் வழங்குவதற்காகவா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. இந்தியாவில் வங்கிகள் மட்டுமே கிரெடிட் கார்டுகளை வெளியிட அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. ஸ்மார்ட்போன்களில் பேமன்ட் செய்வதற்காக ஏராளமான வசதிகள் கிடைக்கின்றன. ஆப்பிள் மட்டுமின்றி கூகுள், அமேசான் மற்றும் சாம்சங் நிறுவனங்களும் பேமன்ட் பிரிவில் தங்களது சேவைகளை வழங்குவதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.