அரசனும் மன அமைதி பெற்றான். (ஒருவன் பிறக்கின்றபோது பரஞானம், அபர ஞானம், தன் முனைப்புஎன்ற ஆணவம் ஆகிய 3 தனங்களோடு பிறக்கின்றான். தடாதகைக்கு இறைவனை பார்த்தவுடன் 3-வது தனம் மறைந்ததை போல மனிதன் இறைவனை நினைப்பதால் ஆணவம் என்ற 3-வது தனம் மறையும் என்பது தத்துவம்) தடாதகை நாளொறு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து கல்வி, கேள்விகளில் சிறந்து வீரம் மிக்கவளாக வளர்ந்தாள். பாண்டிய நாட்டின் அரசியானாள். செங்கோல் வழுவாமல் சிறந்த முறையில் ஆட்சி செலுத்தினாள். பாண்டிய நாடு பெருவளம் பெற்று பொன்னாடாக பொலிவு பெற்றது. தடாதகை தன் நாட்டின் எல்லையை விரிவுபடுத்த எண்ணி பல குறுநில மன்னர்களின் மீது படையெடுத்து சென்று வென்றாள். பிறகு பெரும்படையுடன் சென்று கயிலையம்பதியை அடைந்து போர் முரசு கொட்டினாள். அவளை எதிர்த்த பூதப்படைகளும், நந்திதேவரின் படைகளும் தோல்வியை தழுவின.
இதனை அறிந்த இறைவன் போர்க்கோலத்துடன் அங்கே எழுந்தருளினார். அப்பெருமானை தன்னெதிரே கண்டதும் தடாதகை பெண்ணுக்கே உரிய அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்ற நால்வகை நெறியில் நாணி தலைக்குனிந்தாள். அவரது 3-வது தனங்களில் ஒன்று மறைந்தது. இறைவனே தனக்குரிய கணவன் என்பதை உணர்ந்தாள். இறைவன், நீ மதுரைக்கு செல். இன்றைக்கு 8-ம் நாள் நாம் அங்கு வந்து உன்னை மணம் புரிவோம் என்று கூறினார். அதன்படியே தடாதகை மதுரையை அடைந்து மகளிர் அட்டமங்கலத்தோடு எதிர்கொள்ள அரண்மனைக்குள் புகுந்தாள். இறைவனுக்கும், தடாதகைக்குமான திருமண நாள் குறித்து பல நாட்டு மன்னர்களுக்கும் ஓலை அனுப்பப்பட்டது. வீதிகளும், மாளிகைகளும் அலங்கரிக்கப்பட்டன. தேவர்களும், முனிவர்களும், திருமாலும் வந்திருந்தனர். மேலும் பல நாட்டு மன்னர்களும் திரண்டு வந்திருந்தனர்.
பங்குனி உத்திர பெருநாளில் திருமணத்திற்குரிய நல்லவேளையில் இறைவன் தடாதகையை மணந்தார். சுந்தரபாண்டியன் எனும் பெயருடன் மதுரையை ஆண்டு வந்தார். அதன் பின்பு முருகனின் அவதாரமாக வந்து தோன்றியஉக்கிரகுமார பாண்டியனுக்கு முடி சூட்டி விட்டு மீனாட்சி-சுந்தரேசுவரராக இறைவடிவாயினர் என்பது இத்தல வரலாறு. (மீனை ஒத்த கண்களை உடைய தடாதகை பிராட்டியே மீனாட்சியம்மை என்ற பெயருடன் கோவில் கொண்டு விளங்குகின்றாள்.) தன்னை வேண்டிய பக்தர்களுக்கு அருளியவளாக மீனாட்சி அம்பிகை இத்தலத்தில் அருளுகிறாள். இதனால் தான் பெண்களின் தெய்வமாக இவள் கருதப்படுகிறாள். தங்கள் மஞ்சள் குங்குமம் நிலைக்கவும், தைரியமாகப் பேசவும் மீனாட்சியே கதியென பக்தைகள் தவம் கிடக்கின்றனர்.மீனாட்சி என்பது மீன் போன்ற அழகிய கண்களை உடையவர் என்று பொருள்படும். மீன் முட்டையிட்டு தனது பார்வையாலேயேகுஞ்சு பொறிக்கும். அதுபோல உலகத்து மக்களுக்கு தன் அருள் பார்வையால் மீனாட்சி நலம் தருபவள் என புராணங்கள் போற்றுகின்றன. மீன்களின் கண்கள் இமை இல்லாமல் இரவு பகலும் விழித்து கொண்டிருப்பதுபோல, தேவியும் கண்ணை இமைக்காமல் உயிர்களை காத்து வருகிறார் என்று ஹீராஸ் என்ற அறிஞர் கூறுகிறார். கருவறையில் மீனாட்சி அம்மன் இரு திருக்கரங்களுடன் ஒரு கையில் கிளியுடன் செண்டு ஏந்தியபடி காட்சி தருகிறார். கருணை பொழியும் கண்களுடன் அகிலம் எல்லாம் அருள்பாலிக்கும் அன்னையை காண கண் கோடி வேண்டும். இவரை வணங்கினால் சகல ஐஸ்வர்யங்களுடன்கூடிய வாழ்க்கை அமையும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. ஒரு குடும்பத்தில் பெண்கள் கை ஓங்கி இருந்தால், அந்த வீட்டில் மீனாட்சி ஆட்சி நடக்கிறதா? என்ற பேச்சு வழக்கில் உள்ளது. அந்த அளவுக்கு மீனாட்சி அம்மன் புகழ் இன்றளவும் கொடிகட்டி பறக்கிறது. மதுரை மாநகரத்துக்கு பெருமை சேர்க்கும் வகையில் மீனாட்சி அம்மன் கோவில் திகழ்ந்து வருகிறது. நகரின் மைய பகுதியில் மிக பிரமாண்டமான கோபுரங்களுடன் கம்பீரமாக காட்சி அளிக்கும் மீனாட்சி அம்மன் கோவில் உலக பிரசித்தி பெற்றதாகும். மிகப்பெரிய கோவிலாக கருதப்படும் இந்த கோவில் 1600 ஆண்டு கால பழமை வாய்ந்தது. இந்த கோவில் 17 ஏக்கர் பரப்பளவில்அமைந்துள்ளது. கோவிலின் மொத்த நீளம் 847 அடி. அகலம் 792 அடி ஆகும். ஆடி வீதியில் அமைந்துள்ள பிரகார சுவர்கிழக்கு மேற்காக 830 அடியிலும், வடக்கு கிழக்காக 730 அடியிலும் அமையப்பெற்றுள்ளது. மீனாட்சி அம்மன் கோவிலில் மதுரைக்கு அழகு சேர்ப்பது அதன் கோபுரங்களும், அதில் உள்ள கலாசார சிற்பங்களும்தான்.மொத்தம் 12 கோபுரங்கள், தங்கத்திலானகோபுரங்கள் 2 என 14 கோபுரங்கள் உள்ளன. இதில் கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு என ஒவ்வொரு திசைக்கும் ஏற்றாற்போல் 4 பிரமாண்ட வெளிப்புற கோபுரங்கள் அமையப்பெற்றுள்ளன. இவை அனைத்தும் 9 நிலைகள் கொண்டவை ஆகும். இந்த 4 கோபுரங்களும் ராஜகோபுரங்கள் என்று அழைக்கப்படுகிறது. இந்த கோவில் "மீனாட்சி சுந்தரேசுவரர்" கோவில் என்று அழைக்கப்பட்டு வருகிறது. மீனாட்சி அம்மன் மதுரையில் பிறந்ததாக கருதப்படுவதால் அம்பாளின் சன்னதியே முதன்மையாக உள்ளது. அம்மனை வணங்கிய பின்பே சிவபெருமானை வணங்கும் மரபு கடைபிடிக்கப்படுகிறது. மீனாட்சி அம்மன் சிலை மரகதத்தால் ஆனது. பாண்டிய மன்னன் குலசேகர பாண்டியனின் கனவில் சிவபெருமான் வந்ததால் அவர் கடம்ப வனம் என்ற காட்டை அழித்து மதுரை மாநகரையும், இந்த சிவசக்தி தளத்தையும் அமைத்ததாக கருதப்படுகிறது.