No results found

    மத்திய அரசு கவர்னர் ஆர்.என்.ரவியை கைது செய்திருக்க வேண்டும்- முத்தரசன் ஆவேசம்


    இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் திருச்சியில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- கவர்னர் ஆர்.என்.ரவி ஏற்றுக்கொண்ட பொறுப்பானது மதிக்கத் தக்க கண்ணியமான ஒரு பொறுப்பு. ஆனால் தொடர்ந்து அந்த பொறுப்புக்கு அவர் களங்கம் ஏற்படுத்தி வருகிறார். சட்டப்பேரவையில் கவர்னர் உரை என்பது அமைச்சரவையால் தயாரிக்கப்பட்டு அவரது ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு முதல் நாள் இரவு 12 மணிக்கு தான் அச்சடிக்கப்படும். அதனை அப்படியே வாசிக்க வேண்டும் என்பது மரபு. அதில் ஒரு பகுதியை நீக்குவதும், இன்னொரு பகுதியை சேர்ப்பதற்கும் அவருக்கு உரிமை கிடையாது. மேலும் அந்த கொள்கை, திட்டத்தின் மீது கருத்துக்களை சொல்லும் உரிமை என்பது சட்டமன்ற உறுப்பினர்களுக்குதான் இருக்கிறது. உரை பொய்யானது என்று கவர்னர் கூறுவது அபத்தமானது, கண்டனத்திற்குரியது. கவர்னர் இவ்வாறு பேசுவது அவர் எடுத்துக்கொண்ட உறுதிமொழிக்கு எதிரானது.

    மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு யோக்கியமான அரசாக இருந்தால் இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக பேசும் அவரை இந்த நேரம் டிஸ்மிஸ் செய்து, கைது செய்திருக்க வேண்டும். ஆனால் யோக்கியமற்ற அரசாக இருக்கின்ற காரணத்தால் அவரது இஷ்டத்துக்கு கருத்து சொல்கிறார். சனாதனத்தை தான் ஏற்றுக் கொள்வதாக சொல்கிறார். சனாதனம் தான் நாட்டின் சீரழிவுக்கு காரணம். நாங்கள் ரவியை கேட்டுக் கொள்வதெல்லாம் நீங்கள் கவர்னர் பதவியை ராஜினாமா செய்து விட்டு ஆர்.எஸ்.எஸ். தொண்டனாக, பா.ஜ.க. தொண்டனாக இருந்து என்ன வேண்டுமானாலும் உங்கள் விருப்பத்திற்கு பேசலாம். ராஜ்பவனை கமலாலயம் ஆக்க உங்களுக்கு அனுமதி அளிக்க முடியாது. ராஜ்பவன் மாநில அரசின் நிர்வாகத்திற்கு உட்பட்டது. உங்களுக்கு சம்பளத்தை மக்களின் வரிப்பணத்தில் கொட்டிக் கொடுக்கிறார்கள். பிரதமர் மோடியும், உள்துறை மந்திரியும் அவருக்கு ஆதரவாக இருப்பதால் திமிர்த்தனமாக பேசிக்கொண்டிருக்கிறார். தி கேரளா ஸ்டோரி திரைப்படம் உண்மைக்கு புறம்பான மக்களிடையே மோதலை ஏற்படுத்தும் கருத்துக்கள் உள்ள படமாக கேரளா அரசு தெரிவித்துள்ளது. உளவுத்துறையும் கடுமையாக எச்சரித்துள்ளது. மக்களிடையே மோதலை ஏற்படுத்த சிலர் முயற்சிக்கிறார்கள். நாங்கள் ஒற்றுமையை எதிர்பார்க்கின்றோம். இவ்வாறு அவர் கூறினார்.

    Previous Next

    نموذج الاتصال