No results found

    தமிழ் வருடப்பிறப்பு, ரம்ஜான் பண்டிகை- சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு 1000 சிறப்பு பஸ்கள் இயக்க முடிவு


    கோடைக்காலம் தொடங்கிவிட்டதால் பஸ் பயணம் படிப்படியாக அதிகரித்து வருகிறது. கடந்த வாரம் புனித வெள்ளி, அரசு விடுமுறை என்பதால் தொடர்ச்சியாக 3 நாட்கள் விடுமுறை கிடைத்தது. இதனால் வெளியூர் பயணம் அதிகரித்தது. சென்னையில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு கூடுதலாக சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. கோடை விடுமுறை, பண்டிகை காலம், விசேஷ நாட்கள் அடுத்தடுத்து வருவதால் பஸ்களில் கூட்டம் அதிகரிக்கிறது. 14-ந்தேதி (வெள்ளிக்கிழமை) தமிழ் வருடப்பிறப்பு பண்டிகை கொண்டாடப்படுகிறது. அதைத் தொடர்ந்து 22-ந்தேதி ரம்ஜான் பண்டிகை வருகிறது. இதனால் வெளியூர் பயணம் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிறப்பு நாட்கள் வருவதால் கூடுதலாக 1000 பஸ்களை இயக்க அரசு போக்குவரத்து கழகங்கள் திட்டமிட்டுள்ளன.

    தமிழ் வருடப்பிறப்பு வெள்ளிக்கிழமை வருவதால் 13-ந்தேதி வியாழக்கிழமை 500 சிறப்பு பஸ்கள் கூடுதலாக இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 3 நாட்கள் தொடர் விடுமுறை விடப்படுவதால் மக்கள் கூட்டம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக கருதி சென்னையில் இருந்து பிற மாவட்டங்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. இதேபோல ரம்ஜான் பண்டிகை 22-ந்தேதி (சனிக்கிழமை) வருவதால் 21-ந்தேதி (வெள்ளிக்கிழமை) 500 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். சிறப்பு பஸ்கள் இயக்குவது குறித்து அதிகாரிகள் கூறுகையில், 'கடந்த வாரம் கோயம்பேடு பஸ் நிலையத்தில் கூட்டம் அதிகமாக இருந்தது. அதனால் கூடுதலாக சிறப்பு பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டது. அதேபோல தமிழ் புத்தாண்டு மற்றும் ரம்ஜானையொட்டி விழுப்புரம், சேலம், கும்பகோணம், கோவை, மதுரை போக்குவரத்து கழகங்கள் மூலம் கூடுதலாக சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். வழக்கமாக இயக்கப்படும் 2,100 பஸ்களுடன் கூடுதலாக 500 பஸ்கள் வீதம் இயக்க திட்டமிட்டுள்ளோம்' என்றனர்.

    Previous Next

    نموذج الاتصال