தமிழக சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கொரோனா பரவல் தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். அப்போது அவர், மாஸ்க் அணிவது தொடர்பாக அரசின் நிலைப்பாட்டை தெரியப்படுத்த வேண்டும். மருத்துவ குழு அமைத்து வீடு வீடாக சென்று பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். கொரோனா பரவலை தடுக்க தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என கூறினார். இதற்கு விளக்கம் அளித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது, மருத்துவமனைகளில் தான் கொரோனா பரவல் அதிகரித்து உள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் மாஸ்க் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளை மத்திய அமைச்சர் பாராட்டினார்.
மருந்துகள், மருத்துவ உபகரணங்களின் நிலை குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். மாவட்ட மருத்துவமனைகளில் மாதிரி மருத்துவ பயிற்சி நடத்தப்படாது. தமிழகத்தில் மட்டுமில்லை, பிற மாநிலங்களிலும் கொரோனா தொற்று அதிகரித்துள்ளது. ஒமைக்ரான் வைரஸ் உயிர் பாதிக்கும் தொற்று இல்லை. ஒரே இடத்தில் கூட்டமாக பாதிக்கப்பட்டால் 4வது அலை என சொல்லலாம். இப்போது அந்த நிலை இல்லை. பாதிப்புகள் அதிகரித்தால் பொது இடங்களில் கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பாக முடிவு எடுக்கப்படும். 2067 மெட்ரிக் டன் ஆக்ஸின் வைத்துக்கொள்ளும் அளவுக்கு கட்டமைப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போது பாதிப்பு பெரிய அளவில் இல்லை, தனி நபர் என்ற அளவில் தான் உள்ளது. இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்தார்.