காங்கிரஸ் கட்சி இதுவரை 166 தொகுதிகளுக்கும், ஜனதாதளம் (எஸ்) கட்சி 93 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்துள்ளது. ஆளும் பா.ஜனதா கடந்த 11-ந் தேதி வெளியிட்ட முதல்கட்ட பட்டியலில் 189 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்து இருந்தது. இதில் 52 புதிய முகங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டு இருந்தது. இதில் டிக்கெட் கிடைக்காத எம்.எல்.ஏ.க்களின் ஆதரவாளர்கள் போராட்டத்தில் குதித்தனர். 2-வது கட்ட வேட்பாளர் பட்டியலில் தற்போது எம்.எல்.ஏ.க்களாக உள்ளவர்களில் 11 பேருக்கு டிக்கெட் நிராகரிக்கப்பட்டுள்ளது. அந்த தொகுதிகளில் புதிய முகங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளன.
அரிசிகெரே தொகுதியில் எடியூரப்பாவின் உறவினரான சந்தோஷ் என்பவர் டிக்கெட் கேட்டிருந்தார். ஆனால் அவருக்கு பதிலாக அங்கு பசவராஜிக்கு டிக்கெட் வழங்கப்பட்டுள்ளது. இதனால் சந்தோசின் ஆதரவாளர்கள் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர். அவர்கள் அரிசிகெரேயில் போராட்டம் நடத்தினர். சாலையில் டயர்களை தீ வைத்து கொளுத்தி ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தினர். தான் சுயேச்சையாக போட்டியிட போவதாக சந்தோஷ் அறிவித்துள்ளார். ஜனதா தளம் (எஸ்) கட்சி தலைவர்கள் அழைத்தால் அதுகுறித்து பரிசீலிப்பேன் என்றும் அவர் கூறியுள்ளார். மூடிகெரே தொகுதியில் டிக்கெட் கிடைக்காததால் கடும் அதிருப்தி அடைந்த எம்.பி.குமாரசாமி எம்.எல்.ஏ., சபாநாயகர் காகேரியை சிர்சியில் உள்ள அவரது வீட்டில் நேரில் சந்தித்து ராஜினாமா கடிதத்தை வழங்கினார். அவர் சிக்கமகளூரு தொகுதியில் பா.ஜனதா வேட்பாளர் சி.டி.ரவியை எதிர்த்து போட்டியிடுவார் என்று கூறப்படுகிறது.
ஹாவேரி தொகுதியில் நேரு ஓலேகார் எம்.எல்.ஏ.வுக்கு டிக்கெட் கிடைக்காததால், கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ள அவர் பா.ஜனதாவை விட்டு விலகுவதாக கூறியுள்ளார். அவரது ஆதரவாளர்கள் ஹாவேரியில் உள்ள ரோட்டில் டயருக்கு தீ வைத்து எரித்தனர். சன்னகிரி தொகுதி எம்.எல்.ஏ.வாக உள்ள மாடால் விருபாக்ஷப்பா, வீட்டில் ரூ.8 கோடி ரொக்கம் சிக்கியது தொடர்பான வழக்கில் தற்போது சிறையில் உள்ளார். அவரது குடும்பத்தை சாராத ஒருவருக்கு டிக்கெட் வழங்கப்பட்டுள்ளது. இதனால் மாடால் விருபாக்ஷப்பாவின் ஆதரவாளர்கள் பா.ஜனதா அலுவலகத்திற்குள் புகுந்து அங்கிருந்து நாற்காலி, மேசைகளை அடித்து நொறுக்கினர்.
சிக்கமகளூரு மாவட்டம் கடூரை சேர்ந்தவர் ஒய்.எஸ்.வி.தத்தா. முன்னாள் எம்.எல்.ஏ.வான இவர், ஜனதாதளம்(எஸ்) கட்சியின் மூத்த தலைவராக இருந்தார். இந்நிலையில் கட்சி தலைவர்கள் மீதான அதிருப்தியில் இருந்து வந்த அவர், கடந்த மாதம் தான் அக்கட்சியில் இருந்து விலகி, காங்கிரசில் இணைந்தார். இதனால் அவருக்கு காங்கிரஸ் சார்பில் சிக்கமகளூரு தொகுதியில் போட்டியிட டிக்கெட் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஒய்.எஸ்.வி.தத்தாவுக்கு காங்கிரஸ் சார்பில் கடூர் தொகுதியில் டிக்கெட் வழங்கப்படவில்லை. இதனால் கடும் அதிருப்தி அடைந்த அவர் மீண்டும் ஜனதாதளம்(எஸ்) கட்சியில் சேர்ந்தார். பா.ஜனதா மூத்த தலைவர்களில் ஒருவரான லட்சுமண் சவதி அதானி தொகுதியில் போட்டியிட விரும்பினார். ஆனால் கட்சியில் அவருக்கு சீட் மறுக்கப்பட்டதாக தெரிகிறது. இதையடுத்து அவர் பா.ஜ.க.வை விட்டு விலகுவதாக அறிவித்து உள்ளார். பா.ஜ.க. சார்பில் இதுவரை அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர் பட்டியல்படி தற்போது எம்.எல்.ஏ.க்களாக உள்ள 15 பேருக்கு டிக்கெட் நிராகரிக்கப்பட்டுள்ளது. அவர்களில் பெரும்பாலானவர்கள் பா.ஜனதாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளனர். துமகூரு மாவட்டம் குனிகல் சட்டசபை தொகுதியில் பா.ஜனதா சார்பில் போட்டியிட முன்னாள் எம்.பி. முத்தஹனுமே கவுடா ஆர்வம் காட்டி வந்தார். ஆனால் பா.ஜனதா சார்பில் கிருஷ்ணகுமார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதனால் அதிருப்தி அடைந்துள்ள முத்தஹனுமே கவுடா தேர்தலில் சுயேச்சையாக களமிறங்க முடிவு செய்துள்ளார். துமகூரு மாவட்டம் குப்பி தொகுதியில் இருந்து போட்டியிடுவதற்கு சீட் கிடைக்கும் என்று பா.ஜனதா பிரமுகர் பெட்டேசாமி என்பவர் காத்திருந்தார். குப்பி தொகுதியில் போட்டியிடுவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் அவர் செய்து வந்திருந்தார். ஆனால் பட்டியலில் குப்பி தொகுதியில் பெட்டேசாமிக்கு பதிலாக திலீப்குமார் என்பவருக்கு பா.ஜனதா சீட் கொடுத்திருந்தது. இந்நிலையில் திடீரென்று பெட்டேசாமிக்கு மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.