No results found

    மக்களின் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்ய திட்டங்களில் கவனம் செலுத்த வேண்டும்- மு.க.ஸ்டாலின்


    "கள ஆய்வில் முதலமைச்சர்" என்ற திட்டத்தின் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாவட்டந்தோறும் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் நேற்று அவர் விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி ஆகிய 3 மாவட்டங்களின் வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். இதற்காக நேற்று மதியம் சென்னையில் இருந்து சாலை மார்க்கமாக விழுப்புரத்துக்கு வந்தார். தொடர்ந்து மாலையில் விழுப்புரத்தில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் மற்றும் தொழில் முனைவோர்களுடனான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

    இன்று 3 மாவட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். கள ஆய்வில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:- சென்னை கோட்டையில் எனது அறையில் டேஷ்போர்டு வைத்துள்ளேன். ஒவ்வொரு பணிகளும் எந்த அளவு வளர்ச்சி அடைந்துள்ளது என்பதை அறையில் இருந்தே கண்காணிப்பேன். மாவட்ட அளவிலும் அத்தகைய கண்காணிப்பு மிக அவசியம், தொடர்ச்சியாக கண்காணிக்கப்படாத எந்த திட்டமும், வெற்றி பெற முடியாது. ஊரக வளர்ச்சித்துறை கிராம மக்களின் அடிப்படை தேவையை நிறைவு செய்வதோடு அவர்களின் வாழ்வாதாரத்திற்கும் பல்வேறு வழிகளில் உறுதுணையாக விளங்குகின்றது. 3 மாவட்டங்களை பொருத்தவரை அனைத்து அண்ணா கிராம மறுமலர்ச்சி திட்டங்களை வேகப்படுத்துங்கள். வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தை கவனமாக கையாண்டு பணிக்கு வருபவர்களுக்கு தாமதமின்றி ஊதியம் வழங்க வேண்டும். 15வது நிதி குழு மானிய பணிகளையும் விரைவாக முடிக்க அறிவுறுத்த விரும்புகிறேன். என்னுடைய மாவட்டத்தில் இந்த காலத்தில் இந்த திட்டங்களை முடித்து காட்டினேன் என்று பேர் வாங்கும் அளவுக்கு செய்ய வேண்டும்.

    ஒவ்வொரு திட்டத்தையும் செயல்படுத்தி காட்ட வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன். மக்களின் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்ய திட்டங்களில் ஒவ்வொருவரும் அதிக கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக குடிநீர் மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளையும் வருவாய்த்துறையினர் வழங்கக்கூடிய பட்டா சேவைகள் நகர்ப்புற மேம்பாடு மற்றும் சாலை வசதி ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவது, இளைஞர் திறன் மேம்பாடு மற்றும் கல்வி அரது பொது மருத்துவமனையில் தரமான சிகிச்சை ஆகியவற்றில் தொடர்ந்து கவனம் செலுத்துவது மக்களிடத்தில் நல்ல பெயரை வாங்கி கொடுக்கும் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார். இதில் அமைச்சர்கள் கே.என்.நேரு, பொன்முடி, செஞ்சி மஸ்தான், தலைமை செயலாளர் இறையன்பு, கலெக்டர்கள் பழனி (விழுப்புரம்), பாலசுப்ரமணியம் (கடலூர்), ஷ்ரவன் குமார் (கள்ளக்குறிச்சி) மற்றும் 30-க்கும் மேற்பட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் கலந்து கொண்டனர். அதிகாரிகளிடம் திட்டப்பணிகளை விரைந்து முடிக்குமாறும், திட்டங்களின் நிலவரம் குறித்தும் கேட்டறிந்தார்.

    Previous Next

    نموذج الاتصال