கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ராணுவத்தில் சேர்ந்த அவர் தனது கடுமையான உழைப்பினாலும் உயர் அதிகாரிகளுக்கு கீழ்படிந்து பணி செய்ததாலும் அனைவரிடமும் நன்மதிப்பை பெற்று வந்துள்ளார். இன்னும் திருமணம் ஆகாத யோகேஷ்குமாருக்கு அடுத்த ஆண்டு திருமணம் செய்ய ஏற்பாடுகள் செய்து வந்துள்ளனர். இந்த நிலையில் தனது ஒரே மகனை பறிகொடுத்த ஜெயராஜ் மற்றும் அவரது குடும்பத்தினர் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். கடந்த பொங்கல் விடுமுறையின் போது ஊருக்கு வந்த யோகேஷ்குமார் தனது சகோதரிகள் மற்றும் அவர்களது குழந்தைகளுக்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொடுத்து மகிழ்ச்சிப்படுத்தினார்.
விடுமுறைக்கு எப்போது சொந்த ஊருக்கு வந்தாலும் தனது சகோதரிகள் மற்றும் அவர்களது குழந்தைகளுடன் அதிக நேரம் செலவிட்டு வந்துள்ளார். மேலும் சொந்த ஊரிலும் யோகேஷ்குமார் நல்ல முறையில் அறியப்பட்டு அனைவரிடத்திலும் பாசத்துடன் பழகி வந்துள்ளார். சிறு வயது முதலே கஷ்டப்பட்டு ராணுவத்தில் வேலைக்கு சேர்ந்ததால் அவரது நண்பர்களையும் ராணுவத்தில் சேர்க்க உதவி வந்துள்ளார். மேலும் பல ஆண்டுகள் ராணுவத்தில் பணிபுரிந்து சாதனை படைப்பார் என்று எதிர்பார்த்த நிலையில் துரதிஷ்டவசமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. யோகேஷ்குமாரின் உடல் இன்று மாலை அவரது சொந்த ஊருக்கு கொண்டு வரப்படுகிறது. இதனைத் தொடர்ந்து ராணுவ மரியாதையுடன் அவரது ஊரில் அடக்கம் செய்ய ஏற்பாடுகள் நடந்து வருகிறது. யோகேஷ்குமாரின் மறைவு மூணாண்டிபட்டி மட்டுமின்றி சுற்றுப்புற கிராம மக்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.