பிரதமரின் இந்த நிகழ்ச்சிகளுக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய போலீஸ் கமிஷனர் சங்கர்ஜிவால் ஆலோசனை நடத்தினார். சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை டி.ஜி.பி. சைலேந்திரபாபு நேற்று நேரில் சென்று பார்வையிட்டு முக்கிய ஆலோசனைகள் வழங்கினார். பிரதமர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்படுகிறது. அவர் செல்லும் இடங்களில் வழி நெடுக போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்படுகிறார்கள். இதற்காக 22 ஆயிரம் போலீசார் நாளை சென்னையில் குவிக்கப்படுகிறார்கள்.
போலீஸ் கமிஷனர் சங்கர்ஜிவால் தலைமையில் அனைத்து கூடுதல் கமிஷனர்கள், இணை கமிஷனர்கள், துணை கமிஷனர்கள், உதவி கமிஷனர்கள் மற்றும் இன்ஸ்பெக்டர்கள், ஆயுதப்படை, சிறப்பு காவல் படை போலீசார், கமாண்டோ படையினர் என போலீஸ் பட்டாளமே பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். வாகன சோதனை மற்றும் போலீஸ் ரோந்தும் நேற்று இரவு முதல் தீவிரமாக்கப்பட்டது. சென்னையில் பிரதமர் கலந்து கொள்ளும் இடங்களின் சுற்று வட்டார பகுதிகள் போலீஸ் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. அந்த பகுதிகளில் உள்ள தங்கும் விடுதிகள் மற்றும் நட்சத்திர ஓட்டல்கள், இதர விடுதிகளில் சந்தேக நபர்கள் யாராவது தங்கி இருக்கிறார்களா என்றும் போலீசார் நேற்று இரவில் இருந்தே சோதனை போட்டபடி உள்ளனர். 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, டிரோன்கள் மற்றும் இதர ஆள் இல்லா வான்வெளி வாகனங்கள் பறக்கவும், சென்னையில் நாளை அனுமதி மறுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.