* 'நெயில் எக்ஸ்டென்ஷன்' என்றால் என்ன? பொதுவாக நகத்தை அழகுபடுத்துவதும், அலங்கரிப்பதும் எல்லோருக்கும் தெரிந்திருக்கும். ஆனால் நெயில் எக்ஸ்டென்ஷன் என்பது, அழகான தோற்றத்திற்காக, செயற்கை நகங்களை உருவாக்குவது. பெண்களின் தேவைக்கு ஏற்றார்போன்ற அளவுகளில், செயற்கை நகங்களை உருவாக்கி, அதை அவர்களுக்கு பிடித்த முறையில் அழகுபடுத்த முடியும். நக பராமரிப்பில், அறிமுகமாகியிருக்கும் நவீன அழகியல் இது. * நெயில் எக்ஸ்டென்ஷன் பற்றிய புரிதல் டீன்-ஏஜ் பெண்கள் மத்தியில் இருக்கிறதா? அதிகமாகவே இருக்கிறது. அவ்வப்போது டிரெண்டிங்கில் இருக்கும் அழகுக்கலைகளை டீன்-ஏஜ் பெண்கள் முயன்று பார்க்க ஆவலாக இருக்கிறார்கள். அந்தவகையில், நெயில் எக்ஸ்டென்ஷன் கல்லூரி மாணவிகள் தொடங்கி அலுவலகம் செல்லும் பெண்கள் வரை எல்லோரும் விரும்பக்கூடிய ஒன்றாக இருக்கிறது. நிறைய சின்னத்திரை-வெள்ளித்திரை நடிகைகள் நெயில் எக்ஸ்டென்ஷன் செய்திருக்கிறார்கள். நானே, பல நட்சத்திரங்களுக்கு புதுமையான டிசைன்களை செய்து கொடுத்திருக்கிறேன்.
* நெயில் எக்ஸ்டென்ஷன் எப்படி செய்கிறீர்கள்? கைவிரல் நகம் மற்றும் கால் விரல் நகம் இவ்விரண்டிலும் இதை செய்ய முடியும். செயற்கையாக நகம் உருவாக்கி, அதை புதுப்புது வழிகளில் அழகுபடுத்த முடியும். அதாவது இயல்பான நகப்பூச்சு அலங்காரமும் செய்யலாம். அழகழகான டிசைன்களை கொண்டு, வண்ணம் அல்லது ஓவியம் வரையவும் முடியும். இல்லையென்றால், போட்டோக்களை கூட செயற்கை நகங்களாக மாற்றி அழகாக்க முடியும். * செயற்கை நகம் என்பதால் உறுதிதன்மை எப்படி இருக்கும்? நகத்தின் அடிப்பாகத்தில் இருந்தே செயற்கை நக உருவாக்க பணிகள் நடைபெறும் என்பதால், உறுதியாகவே இருக்கும். மேலும் செயற்கை நகத்தையும், நக பகுதியையும் பசை கொண்டே ஒட்டுவதால், நீண்ட நாட்களுக்கு அழகாக இருக்கும்.
* என்னென்ன விசேஷங்களில் இதை விரும்பி செய்கிறார்கள்? திருமணம், வளைகாப்பு, நிச்சயதார்த்தம் போன்ற விசேஷங்களில் இவை அதிக முக்கியத்துவம் பெறுகின்றன. மேலும் மணமகள் என்பதை தாண்டி மணமகள் தோழிகள், உறவினர்கள் என அனைவருமே, இந்த அழகுக்கலையை விரும்புகிறார்கள். * இவை எதிர்காலத்தில் மிகப்பெரிய தாக்கத்தை உண்டாக்குமா? ஆம்..! நிச்சயமாகவே மிகப்பெரிய தாக்கத்தை உண்டாக்கும். ஏனெனில், நெயில் எக்ஸ்டென்ஷன் என்பது, இப்போது டிரெண்டிங்கில் இருக்கிறது. இதுபற்றிய தேடல் இளம் பெண்கள் மத்தியில் உருவாகி இருப்பதால், இதை முயன்று பார்க்கவும், பயிலவும் நிறைய பெண்கள் ஆசைப்படுவார்கள். * உங்களுக்கு கிடைத்த விருது, கவுரவங்களை பற்றி கூறுங்கள்? ஒருசில விருது வாய்ப்புகள் வந்தபோதும், வெளியூர்களில் இருந்ததால் அவற்றை தவறவிட்டிருக்கிறேன். என்றபோதும், அதைவிட நான் நக அழகு செய்து, அதன் மூலம் நிறைய இளம் பெண்கள் மனம் பூரித்ததை மிகப்பெரிய கவுரவமாக கருதுகிறேன்.