கவர்னர் ஆர்.என்.ரவி இன்று காலை ராமநாதபுரம் அருகே எட்டிவயல் கிராமத்தில் உள்ள தரணி முருகேசன் என்பவரின் இயற்கை வேளாண் பண்ணைக்கு சென்றார். அங்கு இயற்கை வேளாண் மையை பயன்படுத்தி பயிரிடப்பட்டிருந்த பயிர்களை பார்வையிட்டார். இயற்கை வேளாண்மையில் விவசாயம் செய்வது குறித்து விவசாயி தரணி முருகேசனிடம் கேட்டறிந்தார். இயற்கை வேளாண் பண்ணையில் 3 மணி நேரம் இருந்த கவர்னர் ஆர்.என்.ரவி, அங்கிருந்து புறப்பட்டு கார் மூலம் திருஉத்திரகோசமங்கையில் உள்ள மங்கலநாத சுவாமி கோவிலுக்கு சென்றார். அங்கு கோவில் நிர்வாகம் சார்பில் அவருக்கு வரவேற்பு கொடுக்கப்பட்டது. பின்பு கவர்னர் ஆர்.என்.ரவி கோவிலுக்குள் சென்று சாமி தரிசனம் செய்தார். அதனை முடித்து கொண்டு கவர்னர் மீண்டும் ராமநாதபுரம் அரசு விருந்தினர் மாளிகைக்கு சென்றார்.
அங்கு மதிய உணவு சாப்பிட்ட பிறகு சிறிது நேரம் ஓய்வெடுக்கும் கவர்னர், பிற்பகல் 3 மணியளவில் கார் மூலம் பரமக்குடி சென்று இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் மரியாதை செலுத்துகிறார். பின்பு அங்கிருந்து கமுதி அருகே உள்ள பசும்பொன்னுக்கு சென்று முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்துகிறார். அதனை முடித்து கொண்டு கவர்னர் ஆர்.என்.ரவி கார் மூலமாக மாலை 6 மணிக்கு மதுரை விமான நிலையத்திற்கு வருகிறார். அங்கிருந்து விமானம் மூலம் சென்னைக்கு புறப்பட்டு செல்கிறார். கவர்னர் வருகையை முன்னிட்டு ராமநாதபுரம் மற்றும் மதுரை மாவட்டத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இரு மாவட்டங்களிலும் சுமார் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.