No results found

    அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம்: கர்நாடகாவில் காங்கிரசின் ஐந்தாவது தேர்தல் வாக்குறுதி


    கர்நாடக மாநிலத்தில் தேர்தல் பிரசாரம் தீவிரமடைந்துள்ளது. அரசியல் கட்சிகள் வாக்காளர்களை கவரும் வகையில் வாக்குறுதிகளை வழங்குகின்றன. அவ்வகையில் காங்கிரஸ் கட்சி இன்று ஐந்தாவது தேர்தல் வாக்குறுதியை வழங்கியிருக்கிறது. அதாவது, கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து மங்களூருவில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியதாவது:- காங்கிரஸ் கட்சி கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாது என்று நரேந்திர மோடி கூறுகிறார். நாங்கள் உங்களுக்கு (மக்களுக்கு) ஏற்கனவே நான்கு வாக்குறுதிகளை வழங்கியுள்ளோம். அவை காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த முதல் நாளில், முதல் அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டு செயல்படுத்தப்படும்.

    மோடி அவர்களே, நான்கு வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாது என்று சொன்னீர்கள். நான் அதில் மேலும் ஒன்றை சேர்க்கிறேன். முதல் நாளில் நான்கு வாக்குறுதிகளை அல்ல, ஐந்தாவது வாக்குறுதியும் அமல்படுத்தப்படும். கர்நாடகம் முழுவதும் பெண்கள் பொது போக்குவரத்து பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்வார்கள். இவ்வாறு ராகுல் காந்தி பேசினார். அனைத்து வீடுகளுக்கும் 200 யூனிட் இலவச மின்சாரம், குடும்ப தலைவிகளுக்கு ரூ.2,000 மாதாந்திர உதவி, வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு உறுப்பினருக்கும் 10 கிலோ அரிசி இலவசம், 18 முதல் 25 வயது வரை உள்ள பட்டதாரி இளைஞர்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு மாதந்தோறும் ரூ.3,000 மற்றும் டிப்ளமோ படித்தவர்களுக்கு ரூ.1,500 வழங்கப்படும் என காங்கிரஸ் ஏற்கனவே அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

    Previous Next

    نموذج الاتصال