இப்படத்தின் படப்பிடிப்பு தென்காசி மாவட்டம் பகுதியில் 3 மாதங்களாக நடைபெற்று வந்தது. நேற்று முன்தினம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதியில் குண்டு வெடிக்கும் காட்சி படமாக்கப்பட்டது. அப்போது குண்டு சத்தம் கேட்டதால் சுற்று வட்டார பகுதி மக்கள் அச்சமடைந்தனர். பின்னர் அங்கு சென்ற மாவட்ட ஆட்சியர் இதுகுறித்து விசாரணை நடத்தி உரிய அனுமதி பெற்றார்களா என்று விசாரித்தார்.
ஆனால் படக்குழு வனத்துறையிடம் எந்தவித அனுமதியும் பெறவில்லை என்று கூறப்படுகிறது. இதை தொடர்ந்து தென்காசி மாவட்ட ஆட்சியர் துரை ரவிசந்திரன் உடனடியாக படப்பிடிப்பை நிறுத்த உத்தரவிட்டார். அதன்படி 'கேப்டன் மில்லர்' படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் 'கேப்டன் மில்லர்' படக்குழுவினர் முறையான அனுமதி வாங்கி மாவட்ட ஆட்சியரிடம் சான்றிதழை சமர்ப்பித்துள்ளனர். இதைத்தொடர்ந்து தற்போது மாவட்ட ஆட்சியர் ரவிச்சந்திரன் படப்பிடிப்பு நடத்துவதற்கு அனுமதி வழங்கியுள்ளார். இதையடுத்து 'கேப்டன் மில்லர்' படத்தின் படப்பிடிப்பு நாளை அதே இடத்தில் நடைபெறும் என்று படக்குழு அறிவித்துள்ளனர்.