மெரினா கடற்கரையில் கருணாநிதியின் நினைவிடத்தில் இருந்து 360 மீட்டர் தொலைவில் நடுக்கடலில் இந்த பிரமாண்ட பேனா வடிவிலான நினைவு சின்னத்தை அமைக்க இருப்பதாக அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது. கருணாநிதி நினைவிடத்தின் பின் பகுதியில் பெரிய கேட் அமைத்து அதன் வழியாக மக்கள் கடல் மேல் நடந்து சென்று இந்த நினைவு சின்னத்தை அடை யும் வகையில் 650 மீட்டர் தூரத்துக்கு இரும்பு பாலம் அமைக்கவும் திட்டம் தீட்டி உள்ளனர். இந்த பாலம் நிலத்தின் மீது 290 மீட்டரும், கடலின் மீது 360 மீட்டரும் அமையும் வகையில் கட்டப்படும். பொதுமக்கள் பாலத்தில் நடந்து செல்லும் வகையில் கடல் மேல் 6 மீட்டர் உயரத்தில் 7 மீட்டர் அகலத்தில் 3 மீட்டர் கண்ணாடி தரையமைப்பாக பாலம் அமைக்கப்படும்.
சென்னையின் தட்ப வெப்ப நிலைக்கு ஏற்றவாறும், சுற்றுப்புற சூழலுக்கு ஏற்ற வகையிலும் இந்த பாலம் வடிவமைக்கப்படுகிறது. மீன்பிடி படகுகளின் இயக்கம் எந்த வகையிலும் தடைபடாத வகையில் பாலம் வடிவமைக்கப்படுவதாக திட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலையை பார்ப்பதற்கு படகில் சென்று வருவது போல் மெரினாவில் இருந்து நடுக்கடலுக்கு கடலின் அழகை ரசித்தபடி பாலத்தில் நடந்து சென்று பேனா சின்னத்தை அடையும் வகையில் திட்டம் தீட் டப்பட்டு உள்ளது. இந்த பிரமாண்ட நினைவு சின்னத்துக்கு முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் பேனா நினைவுச் சின்னம் என்று பெயரிடப்பட்டு உள்ளது.
இந்த திட்டத்துக்கு மாவட்ட அளவிலும், மாநில அளவிலும் முன்மொழிவு பெறப்பட்டுவிட்டது. இதன் அடுத்த கட்டமாக மத்திய அரசின் அனுமதிக்காக இந்த திட்டத்தை தமிழக அரசு அனுப்பி வைத்தது. கடலோர ஒழுங்கு முறை ஆணையம் இந்த திட்ட அறிக்கையை விரிவாக ஆய்வு செய்தது. உயர்மட்ட அளவிலான அதிகாரிகள் அடங்கிய குழுவினர் இந்த திட்டத்துக்கு முதற் கட்ட அனுமதி வழங்கிவிட்டனர். இந்நிலையில் பேனா நினைவு சின்னம் அமைக்க அனுமதி கோரி மத்திய அரசின் சுற்றுச்சூழல் துறை அமைச்சகத்திற்கு தமிழக அரசின் பொதுப்பணித் துறை கடிதம் அனுப்பி இருந்தது. தமிழக அரசின் விண்ணப்பத்தை பரிசீலித்த மத்திய சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டு குழு பொதுமக்களின் கருத்து, மீனவ சமுதாய மக்களின் கருத்துக்களை கேட்க வேண்டும் என்று நிபந்தனை விதித்திருந்தது. அதன்படி கடந்த ஜனவரி மாதம் 31-ந்தேதி சென்னை கலைவாணர் அரங்கில் பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் மாவட்ட கலெக்டர் அமிர்தஜோதி முன்னிலையில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளும், பொதுப்பணித் துறை தலைமை அதிகாரிகளும் பங்கேற்று கருத்து கேட்டனர். அப்போது அந்த கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்பட 12 பேர் பேனா நினைவு சின்னத்தை கடலில் வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பேசினார்கள். பேனா நினைவு சின்னத் துக்கு ஆதரவாக 22 பேர் கருத்துக்களை பதிவு செய்தி ருந்தனர். இவர்கள் தெரிவித்த கருத்துக்கள் அனைத்தும் முழுமையாக பதிவு செய்யப்பட்டு அறிக்கையாக தயாரிக்கப்பட்டிருந்தது. பொதுமக்களின் கருத்துக்கள் மற்றும் பொதுப்பணித் துறை தயாரித்த சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையை பரிசீலித்த தமிழ்நாடு கடற்கரை மேலாண்மை மண்டல ஆணையம் அதற்கு ஒப்புதல் வழங்கி மத்திய அரசின் சுற்றுச்சூழல் மதிப்பீட்டு குழுவுக்கு பரிந்துரை செய்துள்ளது. தமிழ்நாடு கடற்கரை மேலாண்மை மண்டல ஆணையத்தின் பரிந்துரையை ஏற்று தமிழக பொதுப்பணித்துறை சார்பில் பேனா நினைவு சின்னத்திற்கு ஒப்புதல் வழங்குமாறு மத்திய அரசின் சுற்றுச்சூழல் மதிப்பீட்டு குழுவுக்கும், கடலோர ஒழுங்குமுறை ஆணையத்துக்கும் விரிவாக கடிதம் அனுப்பி உள்ளது. அதில் பேனா நினைவு சின்னம் கட்டுமான பணிகளை விரைவில் தொடங்க உள்ளதாகவும் இதற்கு அனுமதி வழங்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. இதற்கு மத்திய அரசு விரைவில் அனுமதி வழங்கி விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் (சி.எம்.டி.ஏ.) பேனா நினைவு சின்னத்தின் வரை படத்தை சமர்ப்பித்து அனுமதி வாங்குவதற்கு அடுத்த கட்டமாக ஏற்பாடுகள் நடந்து வருகிறது. கருணாநிதியின் பிறந்த நாளான ஜூன் 3-ந்தேதி பேனா நினைவு சின்னத்துக்கு அடிக்கல் நாட்டும் வகையில் பணிகள் நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.