No results found

    சாலையோரங்களில் நீண்ட நாட்களாக நிற்கும் வாகனங்கள் ஏலம் விடப்படும்: சென்னை மாநகராட்சி எச்சரிக்கை


    பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- பெருநகர சென்னை மாநகராட்சி மேயரின் 2023-24-ம் ஆண்டு பட்ஜெட்டில், மாநகராட்சி பகுதிகளில் தெருவோரங்கள் மற்றும் சாலைகளில் கைவிடப்பட்ட வாகனங்களால் பொதுமக்களுக்கு பெரும் இடையூறாகவும், போக்குவரத்து நெரிசலுக்கும் வழிவகுக்கிறது. அப்பகுதி குப்பைகளை கொட்டும் பகுதிகளாக உருவாவதால் சாலைகளை முறையாக சுத்தம் செய்ய இயலாத நிலையும் ஏற்படுகிறது. இதனால், கைவிடப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கையை கணக்கெடுத்து அடையாளம் கண்டு அவற்றினை அகற்ற தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

    முதற்கட்டமாக சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் போக்குவரத்துக்கு இடையூறாக நீண்ட நாட்களாக சாலைகள் மற்றும் பொது இடங்களில் கேட்பாரற்று நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 2 சக்கர வாகனங்கள், 3 சக்கர வாகனங்கள், 4 சக்கர வாகனங்கள் மற்றும் கனரக வாகனங்களை சென்னை மாநகராட்சி மற்றும் பெருநகர சென்னை போலீஸ் அதிகாரிகளால் உடனடியாக அகற்றிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது. எனவே, சாலையோரங்கள், நடைபாதைகள், தெருக்கள் மற்றும் பொது இடங்களில் நீண்ட நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களின் உரிமையாளர்கள், இவ்வறிவிப்பு வெளியிடப்பட்ட 15 நாட்களுக்குள் தாமாகவே முன்வந்து உடனடியாக வாகனங்களை அப்புறப்படுத்த கேட்டுக் கொள்ளப்படுகிறது. வாகனத்தின் உரிமையாளர்கள் தாமாக முன்வந்து வாகனங்களை அகற்றாதபட்சத்தில் இந்த வாகனங்களின் மீது சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, போலீஸ் அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் மாநகராட்சியால் கண்டறியப்பட்டுள்ள பொது இடத்தில் இந்த வாகனங்கள் கொண்டு சென்று வைக்கப்படும்.

    அவ்வாறு அப்புறப்படுத்தப்பட்ட வாகனங்களின் விவரங்கள் சென்னை மாநகராட்சியின் இணையதளத்திலும், செய்தித்தாளிலும் வெளியிடப்படும். வாகனத்தின் விவரங்களை தொடர்புடைய வாகனங்களின் உரிமையாளர்கள் பார்வையிட்டு, சம்பந்தப்பட்ட மாநகராட்சியின் மண்டல அலுவலர்களை 15 நாட்களுக்குள் அணுகி உரிய விவரங்கள் மற்றும் ஆவணங்களை சமர்ப்பித்திட வேண்டும். அவ்வாறு உரிமை கோரப்படாத வாகனங்கள் குறிப்பிட்ட நாட்களுக்குப் பிறகு உரிய சட்ட நடவடிக்கைகளைப் பின்பற்றி பொது ஏலத்தில் விடப்படும். சென்னை மாநகராட்சிப் பகுதியில் போக்குவரத்து மற்றும் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள வாகனங்களை அகற்றுவதன் மூலம் பொதுமக்களுக்கு இடையூற்ற சிறந்த போக்குவரத்துக்கும், குப்பைகளற்ற சிறந்த தூய்மைப் பகுதியாகவும் திகழ்ந்திட வழிவகை ஏற்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Previous Next

    نموذج الاتصال