No results found

    சென்னை பாரிமுனையில் 4 மாடி கட்டிட விபத்தில் 10 பேர் சிக்கி தவிப்பு


    சென்னை பாரிமுனை அரண்மனைகாரன் தெருவில் பழமையான 4 மாடி கட்டிடம் உள்ளது. இதனை புதுப்பிக்கும் பணிகள் இன்று காலை நடைபெற்று வந்தது. இதில் வடமாநில தொழிலாளர்கள் பலர் ஈடுபட்டு இருந்தனர். இந்த நிலையில் இன்று காலை 10 மணி அளவில் 4 மாடி கட்டிடம் திடீரென இடிந்து விழுந்தது. அப்போது 'டமார்' என்று வெடிச்சத்தம் போன்று பயங்கர சத்தம் கேட்டது. கடுமையான புகை மூட்டமும் ஏற்பட்டது. இதை தொடர்ந்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் கட்டிடம் இடிந்து விழுந்த பகுதிக்கு ஓடி வந்தனர். கட்டிடத்தின் இடிபாடுகள் மலை போல குவிந்து கிடந்தன. கட்டிடத்தை புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த சுமார் 10 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கி கொண்டனர்.

    இதுபற்றி உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பாரிமுனை, ஐகோர்ட்டு, கொண்டித்தோப்பு உள்ளிட்ட இடங்களில் இருந்து ஏராளமான தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்றனர். தீயணைப்பு வீரர்கள் 50 பேர் இடிபாடுகளை அகற்றும் பணியில் தீவிரமாக களம் இறங்கினர். பெரிய பெரிய துண்டுகளாக கிடந்த கட்டிட இடிபாடுகளை மிஷின் மூலமாக உடைத்து எடுத்தனர். சம்பவ இடத்துக்கு போலீஸ் அதிகாரிகள் மற்றும் அரசு துறைகளை சேர்ந்த அதிகாரிகளும் விரைந்து சென்று இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியை முடுக்கி விட்டனர். கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி இருப்பவர்களின் கதி என்ன என்பது தெரியவில்லை. இடிபாடுகளுக்குள் சிக்கி தவிப்பவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

    கட்டிடத்தை புதுப்பிக்கும் பணிகளில் ஈடுபட்டவர்களில் பெரும்பாலானவர்கள் வடமாநில தொழிலாளர்கள் என்று கூறப்படுகிறது. இன்று காலையில் கட்டிடம் இடிந்து விழுந்தபோது அப்பகுதியில் அதிர்ந்துள்ளது. கட்டிடம் இடிந்து விழுந்தபோது அந்த வழியாக நடந்து சென்றவர்கள் கட்டிடம் இடிந்து விழுந்ததை பார்த்து அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்து உள்ளனர். அரண்மனைகாரன் தெரு வழியாக நடந்து சென்ற 2 பெண்களில் ஒருவர் கட்டிட இடிபாட்டில் சிக்கி இருப்பதாக கூறப்படுகிறது. அவரை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. இடிபாடுகளில் சிக்கி இருப்பவர்களை மீட்பதற்காக 100-க்கும் மேற்பட்ட அரசு பணியாளர்கள் களம் இறங்கி வேலை செய்து வரும் நிலையில் கட்டிடம் இடிந்து விழுந்ததற்கான காரணம் என்ன? என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது கட்டிடத்தின் தூண்களை புதுப்பிப்பதற்காக செதுக்கியபோதுதான் கட்டிடம் இடிந்து தரைமட்டமாகி இருப்பது தெரிய வந்தது. இது தொடர்பாக கட்டிட உரிமையாளர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதன் முடிவில் கட்டிடம் இடிந்து விழுந்த சம்பவத்தில் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. இந்த சம்பவம் பாரிமுனை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Previous Next

    نموذج الاتصال