பைரவர் விரதம் அனைத்து அஷ்டமி திதிகளிலும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதிலும் செவ்வாய்க்கிழமையில் வரும் அஷ்டமி திதி மிகவும் விசேஷம் ஆகும். பைரவ விரதம் தொடர்ச்சியாக 21 அஷ்டமி திதிகளில் கடைப்பிடிப்பது மிகவும் சிறப்பானதாகும். இத்தனை சிறப்பு மிக்க பைரவரை 12 ராசிக்காரர்கள், அதற்குரிய கிழமைகளில், வழிபட்டால், சிறந்த பலனை அடையலாம்.
ஞாயிறுக்கிழமை சிம்ம ராசியினர் ஞாயிற்றுக் கிழமையில் வழிபடுவதால், தள்ளிப்போகும் திருமணம் கை கூடும். இந்த கிழமையில் சிம்ம ராசி உள்ள ஆண், பெண்கள் பைரவருக்கு ராகு காலத்தில் அர்ச்சனை, ருத்ராட்ச அபிஷேகம், வடை மாலை சாற்றி வழிபட்டால், திருமண தடை நீங்கி விரைவில் நடை பெறும்.
திங்கட்கிழமை கடக ராசியினர் திங்கட் கிழமை அல்லது சங்கடஹர சதுர்த்தி தினத்தில் பைரவருக்கு பன்னீர் அபிஷேகம் செய்து, சந்தன காப்பிட்டு, புனுகு பூசி, நந்தியாவட்டை மலர் மாலை அணிவித்து வழிபட்டு வந்தால், கண் சம்பந்தமான நோய்கள் குணமாகும்.
செவ்வாய்க்கிழமை மேஷம் மற்றும் விருச்சிக ராசியினர் செவ்வாய்க் கிழமையில் பைரவரை வழிபடுவதால் சிறப்பான பலன்களை தரும். மிளகு தீபம் ஏற்றி வழிபட்டு வந்தால் இழந்த பொருளை திரும்ப பெறலாம்.
புதன்கிழமை மிதுனம், கன்னி ராசியினர் புதன் கிழமைகளில் பைரவரை வழிபடுவதன் மூலம் நற்பலன்களைப் பெறலாம். நெய் தீபம் ஏற்றி வழிபடுவதால் பூமி லாபம் கிடைக்கும்.
வியாழக்கிழமை தனுசு, மீன ராசியினர் பைரவரை வியாழக்கிழமைகளில் வழிபடுவதன் மூலம் சிறப்பான பலன்கள் கிடைக்கும். குறிப்பாக வியாழக்கிழமையில் விளக்கேற்றி வழிபட்டால் பில்லி சூனியம் விலகும் என்பது ஐதீகம்.
வெள்ளிக்கிழமை ரிஷபம், துலாம் ராசியினர் வெள்ளிக்கிழமை அன்று கால பைரவரை வழிபடுவதால் சிறப்பான பலன்களை பெறலாம். வெள்ளிக்கிழமை மாலையில் வில்வ இலையாலும், வாசனை மலர்களாலும் சகஸ்ரநாம அர்ச்சனை செய்து வந்தால் வறுமை நீங்கி செல்வம் சேரும்.
சனிக்கிழமை மகரம், கும்ப ராசியினர் சனிக்கிழமையன்று பைரவரை வழிபடுவதால் சிறப்பான பலன்களை தரும். சனி பகவானுக்கு பைரவர் தான் குரு ஆவார். இதனால் அஷ்டம சனி, ஏழரை சனி, அர்த்தாஷ்டமச் சனி விலகி நல்லது நடக்கும் என்பது ஐதீகம். மேலும் தேய்பிறை அஷ்டமியில் பஞ்ச தீபம் ஏற்றி வழிபட்டால் காலத்தினால் தீர்க்க முடியாத தொல்லைகள் நீங்கி, நல்லவை வந்து சேரும்.