No results found

    புதிய நிலக்கரி சுரங்கங்களுக்கு அன்புமணி கடும் எதிர்ப்பு


    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கடலூர் மாவட்டத்தை சீரழித்துக் கொண்டிருக்கும் நிலக்கரி சுரங்கங்கள் எனப்படும் பேரழிவு சக்தியின் கொடுங்கரங்கள் காவிரி பாசன மாவட்டங்களையும் இறுக்கிப் பிடிக்கத் தொடங்கியிருக்கின்றன. காவிரி படுகையில் 5 புதிய நிலக்கரி சுரங்கங்களும், காவிரிப்படுகையையொட்டி ஒரு சுரங்கமும் அமைக்கப்படவுள்ளன. இது தடுக்கப்படாவிட்டால் வளம் மிகுந்த காவிரி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலப் பகுதிகள் பாலைவனமாக மாறுவதை எவராலும் தடுக்க முடியாது என்ற உண்மையை அரசு உணர மறுப்பது வருத்தம் அளிக்கிறது.

    மத்திய அரசு அடுத்தடுத்தடுத்து அறிவித்த ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் காவிரி பாசன மாவட்டங்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்தன. ஏற்கனவே ஓ.என்.ஜி.சி நிறுவனத்தின் எண்ணெய் கிணறுகளால் ஏற்படும் பாதிப்பில் இருந்து காவிரி பாசன பகுதிகளை மீட்பதற்காக அவற்றை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தி வந்த பா.ம.க. அதன்பின் தமிழ்நாடு அரசுக்கு கூடுதல் அழுத்தம் கொடுத்து, அப்பகுதிகளை காவிரி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கச் செய்தது. அத்தகைய வளம் மிக்க பகுதிக்கு நிலக்கரி சுரங்கங்கள் வாயிலாக மீண்டும் மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்படுவதை பாட்டாளி மக்கள் கட்சி ஒருபோதும் அனுமதிக்காது.

    சேத்தியாத்தோப்பு, வடசேரி, மைக்கேல்பட்டி நிலக்கரித் திட்டங்கள் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட இருப்பதை மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி அறிவித்திருக்கிறார். இவற்றுக்கான ஏலத்தை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த நவம்பர் 3-ம் தேதி தொடங்கி வைத்திருக்கிறார். ஆனால், இந்த நிலக்கரி திட்டங்கள் எதுவும் இல்லை என்று கூறி முழுப்பூசணியை சோற்றில் மறைக்கும் முயற்சியில் தமிழ்நாடு அரசு ஈடுபட்டிருக்கிறது. இந்த முயற்சி வெற்றி பெறாது. இவற்றையும் கடந்து 2030-ம் ஆண்டுக்குள் 15 ஆயிரம் மெகாவாட் அளவுக்கு நீர்மின் திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளதாக அண்மையில் தாக்கல் செய்யப்பட்ட நிதி நிலை அறிக்கையில் தமிழ்நாடு அரசு அறிவித்திருக்கிறது.

    5000 மெகாவாட் அளவுக்கு அனல்மின் திட்டப்பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. 2030-ம் ஆண்டுக்குள் 20 ஆயிரம் மெகாவாட் அளவுக்கு சூரிய ஒளி மின்திட்டங்களை செயல்படுத்த தமிழ்நாடு அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. அவ்வாறு இருக்கும்போது தேவையே இல்லாமல், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் நிலக்கரி சுரங்கத் திட்டங்களை செயல்படுத்துவது நமக்கு நாமே பேரழிவை ஏற்படுத்திக் கொள்வதற்கு ஒப்பானதாகும். அதை அரசு செய்யக்கூடாது. என்.எல்.சி மூன்றாவது சுரங்கத் திட்டம், கடலூர், அரியலூர், தஞ்சாவூர் ஆகிய காவிரி பாசன மாவட்டங்களில் செயல்படுத்தப்பட இருக்கும் 5 புதிய நிலக்கரி திட்டங்கள் ஆகியவற்றுக்கு தமிழ்நாடு அரசு அனுமதி அளிக்காது. அந்த திட்டங்களுக்கு நிலத்தை கையகப்படுத்தித் தராது என்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியளிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Previous Next

    نموذج الاتصال