விடைத்தாள்களை கவனமுடன் திருத்தவும், தவறுகள் ஏற்படாத வகையில் முறையாக திருத்தம் செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கூட்டல் தவறும், மதிப்பெண் போடாமல் விடுதல் உள்ளிட்ட பிழைகள் ஏற்படாதவாறு பணியினை மேற்கொள்ள வேண்டும் என கல்வி அதிகாரிகள் மூலம் ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. விடைத்தாள் திருத்தும் பணியில் அலட்சிய போக்கு வேண்டாம் எனவும் மையங்களில் செல்போன் பயன்படுத்துவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும் என்று தேர்வுத்துறை எச்சரித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் விடைத்தாள் திருத்தம் செய்த ஆசிரியர்களில் சிலரின் கவனக்குறைவின் காரணமாக மாணவர்களுக்கு மதிப்பெண் குறைவதோடு, விபரீத முடிவுகளை எடுக்கும் சூழலும் உருவாகிறது. தவறு செய்யும் ஆசிரியர்கள் நடவடிக்கைக்கு ஆளாகிறார்கள். இந்த போக்கு தொடரக்கூடாது என்பதில் கல்வித்துறை உறுதியாக உள்ளது. விடைத்தாள் திருத்தும் பணி 24-ந்தேதி வரை நடைபெறுகிறது. அதன்பின்னர் மதிப்பெண் பதிவேற்ற பணிகள் நடைபெறும்.
பிளஸ்-2 தேர்வு நேற்று முடிவடைந்த நிலையில் அனைத்து பாடங்களின் விடைத்தாள்களும் பாதுகாப்பாக மையங்களில் வைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மாவட்டத்திலும் விடைத்தாள்கள் கலெக்டர் கட்டுப்பாட்டில் போலீஸ் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளன. சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டு அந்த பகுதிக்கு வெளியாட்கள் செல்வதை தடுக்கும் வகையில் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. விடைத்தாள்கள் 10-ந்தேதி முதல் திருத்தப்படுகின்றன. விடைத்தாள்கள் மாவட்டங்களுக்கு இடையே இடமாற்றம் செய்து திருத்தப்படுகின்றன. தமிழகம் முழுவதும் 80 மையங்களில் விடைத்தாள்கள் திருத்தப்படுகின்றன. இந்த பணியில் 70 ஆயிரம் ஆசிரியர்கள் ஈடுபடுகிறார்கள்.