மற்றொரு நிகழ்வாக சிவனின் நெற்றிக் கண்ணில் இருந்து தோன்றியவர் ஆறுமுக பெருமான். நெற்றியின் ஜுவாலையில் இருந்து தோன்றிய இவரை வழிபடும் விதமாகவும் தீப வழிபாடு கார்த்திகை மாதத்தில் நடைபெறுகின்றது. 'கார்த்திகேயன்' என்று அழைக்கப்படுபவர் அல்லவா முருகபிரான். தீபாவளியில் ஆரம்பித்து கார்த்திகை முழுவதுமே தீப அலங்காரம்தான். வழிபாடுகள்தான். அநேக விளக்குகள் அகல் விளக்காகவும். சில குத்து விளக்குகளும் ஏற்றப்பட்டு வீடுகள் ஜெக ஜோதியாய் இருக்கும். இதுவே மன மகிழ்வாக அமையும். ஆந்திர மாநிலத்தில் கார்த்திகை மாதமும் கார்த்திகை விரதமும் மிக சிறப்பு பெற்றது. கார்த்திகை பவுர்ணமி அன்று சிவ ஆலயங்களில் 365 திரிகளைக் கொண்டு விளக்கேற்றி வழிபடுவர்.
இறைவன் என்றாலே அது பக்தி மார்க்கமும், ஞான மார்க்கமும் கலந்த பாதைதான். அதிலும் சிவ வழிபாடு எனும் பொழுது ஒவ்வொருவர் மனதிலும் கூடுதலாகவே அடக்க ஒடுக்கம் இருக்கும். 'ஓம் நமசிவாய' 'சிவ சிவ' எனப்படும் பரம் பொருளைப் பற்றிய மேலும் சில கருத்துக்களை அறிவோம். மீண்டும் பகிர்ந்து கொள்வோம். சிவனே பூமியில் வாழ்வை ஏற்படுத்தியவர். அதனால் இவரை ஆதிநாதன் என்று அழைக்கின்றனர். சிவ பிரான் கழுத்தினைச் சுற்றியுள்ள பாம்பின் பெயர் வாசுகி. இவரின் சகோதரர்தான் சேஷநாதன். இவரது குழந்தைகளாக விநாயகர், முருகபிரான், அசோக குமாரி என குறிப்பிடப்பட்டாலும் இன்னும் சில தெய்வ பிறப்புகள் உள்ளனர்.
ஓம் நமசிவாய என்ற பஞ்சாட்சரமும், மகாமி ருத்யுஞ்சய ஜெபமும் சக்தி வாய்ந்த மந்திரங்களாக கடைபிடிக்கப்படுகின்றன. வானத்தில் இருந்து பூமிக்கு வந்த 12 ஒளி வீச்சுகள் 12 ஜோதிர் லிங்கமாக வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. திங்கட்கிழமை பிரதோசம், மாத சிவராத்திரி, மகா சிவராத்திரி, ஆருத்ரா தரிசனம், பிரதோஷம் என இவருக்கென விசேஷ பூஜைகள் உண்டு. வில்வ இலை ஒரே ஒருதளம் (மூன்று இலைகள் கொண்டது) சமர்ப்பித்தாலும் அது மிக உயர்ந்த பூஜைதான். கைலாயம்- சிவ பிரானின் இருப்பிடமாகக் கூறப்படும் இந்த இடம் விஞ்ஞானிகளுக்கு சவால் விடும் புதிர்தான். சிவ பிரான் முற்றும் துறந்த நிலையை கொண்டவர். குடும்பமும் உண்டு. ஆழ்நிலை தியானத்தின் இருப்பிடம்.
அன்பே சிவம் என்பர். ஆனால் இவரின் உக்கிரமும் தாங்க முடியாததுதான். சிவதாண்டவம், சிவ நடனம் என்பது கண் கொள்ளா காட்சியாக இருக்கும். நடனமாடுபவர்கள் கண் முன்னே சிவனை கொண்டு வந்து நிறுத்தி விடுவர். சற்றும் அசையாத கால வரையற்ற தியானமும் இவருக்குச் சொந்தமானதே. தேவர்களாலும் வணங்கப்படுபவர் அசுரர்களாலும் வணங்கப்படுபவர். பூத கணங்களாலும் வணங்கப்படுபவர். அடர்ந்த பச்சை காட்டிலும் இருப்பவர். சுடுகாட்டிலும் இருப்பவர். காம, குரோதங்களை அழிப்பவர். பிறப்பு, இறப்புகளில் இருந்து ஒருவரை விடுவிப்பவர். தலையில் பிறை சந்திரன் சூடியவர். சந்திரன் வளர்ந்து, தேயும் தன்மை கொண்டது. அந்த காலத்தினையே தன் கட்டுப்பாட்டில் கொண்டவர். கால அளவால் இவரை கட்டுப்படுத்த முடியாது. கூற முடியாது. சந்திரனை தலையில் சூடியதால் 'சந்திரசேகரர்' என பெயர் பெற்றவர். உடல் முழுவதும் சாம்பல் பூசியவர். எந்த மனிதனும் இறப்புக்கு உட்பட்டவர் என்பதனை உரைக்கின்ற தத்துவம். கங்கையை தலையில் முடிந்தவர். இப்புனித நீரை பூமிக்கு அளித்தவர். அதனால்தான் கங்காதரன் எனப்பெயர் பெற்றவர். நெற்றி கண்ணை திறப்பவர். நந்தியினை வாகனமாகக் கொண்டவர். நந்தியை வணங்குவது சிவ பிரானை வணங்குவதற்கு சமமே. அத்தகைய நிலையில் தன் தவத்தால் ஒழுக்கத்தால் பெற்றவர் நந்தி. திருவண்ணாமலையில் மலையே சிவன்தான். அர்த்த நாரீஸ்வரராய் சிவனும், பார்வதியும் வந்து கோவிலில் ஏற்றப்படும் மகா தீபத்தினையும், 2,668 அடி உயரம் கொண்ட மலையில் ஏற்றப்படும் தீபத்தினையும் பார்வையிடுவர். இதனை காண்பதே நமக்கு கண் கொள்ளா காட்சிதான். மலை உச்சியில் ஏற்றப்படும் தீபம் சுற்று வட்டாரத்தில் சுமார் 35 கி.மீ. அளவுக்குத் தெரியும். ஆக இறைவனை ஜோதி தீபமாய் மக்கள் பெரு வெள்ளம் நன்கு தரிசிக்க முடியும். ஒளி என்பதே இருள் எனும் தீயதை நீக்குவதுதான். ஒளியே ஒரு மனிதனை மேம்படுத்தும். மத நம்பிக்கை உடையவர்கள். மத நம்பிக்கை இல்லாதவர்கள், தன்னம்பிக்கை கொண்டு வாழ்பவர்கள் இப்படி யாராக இருந்தாலும் ஒளி வேண்டும். உயிர் இல்லாத உடலில் ஒளி ஏது. எனவேதான் ஆத்மா ஜோதி ரூபம், ஆண்டவனும் ஜோதி ரூபமே என்று வழிபடுகின்றோம். முருகன் என்றாலே அழகு, போர், வெற்றி, தீயவற்றை அழித்தல் என்றே பொருள் கொள்ளப்படுகிறது. அவருக்காக கார்த்திகை நன்னாளில் தீபம் ஏற்றி வழிபடுவது தமிழர்களின் முக்கிய வழிபாட்டு முறையாக இருந்து வருகின்றது. வைணவ ஆலயங்களிலும் கார்த்திகை மாத தீபத் திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுகின்றது. திருவண்ணாலை என்றாலே சித்தர்கள் பூமிதான். சேஷாத்ரி சுவாமிகள், ரமண மகரிஷி, யோகி ராம், சூரத்குமார், மூக்குபொடி சித்தர் என எண்ணற்ற சித்தர்கள் ஜோதியாகத்தான் என்றென்றும் அரூப நிலையில் பிரகாசித்துக் கொண்டிருக்கின்றனர். தென்னகத்தில் மட்டும்தான் சிவ வழிபாடு என நினைக்க முடியுமா? கேதார்நாத் சென்று பார்க்க வேண்டும். அங்கு குளிர் காலத்தில் நெய் தீபம் ஏற்றி கோவிலை மூடி பூஜைக்கான விக்கிரகத்தினை எடுத்து அடுத்த கிராமம் சென்று விடுவர். ஆறு மாதம் சென்று கதவினைத் திறந்தாலும் அந்த நெய் தீபம் எரிந்து கொண்டுதான் இருக்கின்றது. இது இறைவனின் மகிமை. சிவனின் மகிமை. இறைவனாய் ஜோதியாய் காட்சி தரும் தீபத்தின் மகிமை. தீபம், தீபம் என்று சொல்கின்றோம். விளக்கேற்றிதான் பூஜையினையோ, பொது நிகழ்வினையோ ஆரம்பிக்கின்றோம். அறியாமை எனும் இருளை அகற்றும் என்பதுதான் தீபம் ஏற்றுவதன் உள் கருத்து. அன்றாடம் ஏற்றும் தீபத்திற்கு எத்தனை கவனங்கள் செலுத்த வேண்டும் தெரியுமா? தீபம் இன்றி உயர் சக்தியோடு பேசுவது சாதாரண மனிதர்களுக்கு எளிதல்ல. தீபம் ஏற்றி பக்தியோடு அதனிடம் பேசினால் நம்பி அக்கறையோடு பேசினால் தீபமும் உங்களிடம் பேசும் என்கின்றனர் ஆன்மீகவாதிகள். தீபம் ஏற்றும் விளக்கு அகலாக இருந்தாலும் சிறந்ததே. அதனை சுத்தம் செய்து மக்கள் குங்குமம் சந்தனம் இட்டு எண்ணை விட வேண்டும். பொதுவில் நல்ல எண்ணை பயன்படுத்துவர். எண்ணை விட்ட பின்னரே பஞ்சு திரி இரண்டினை இணைத்து எண்ணையில் நனைத்து முனையினை சீர்படுத்தி விளக்கு ஏற்ற வேண்டும். பொதுவில் ஒரு முகமாக தீபச் சுடர் கிழக்கு நோக்கி ஏற்றுவர். இரு முகமாக கிழக்கு மேற்காக ஏற்றுவர். வடக்கு பார்த்தும் ஏற்றலாம். தெற்கு பார்த்து தீபம் ஏற்றுவதில்லை. குத்து விளக்கினை முகமாக ஏற்றுவர். ஒரு முகம் ஏற்றுவது நினைத்தது நடக்க - இது நாம் அன்றாடம் சாமிக்கு கொடுக்கும் பட்டியல் லிஸ்ட்தான். 2 முகமாக ஏற்றுவது குடும்பம், உறவினர் ஒற்றுமை கூடும் என்பர். மூன்று முகம் புத்திர தோஷம் நீங்கும், சந்ததியினர் தழைத்து இருப்பர். 4 முக தீபம் ஏற்றுதல் உணவு பஞ்சம் வராது. தரித்திரங்கள் வராது. 5 முக தீபம் என்பது செல்வமும, சகல நன்மைகளையும் தரும் என்பர். இதேபோல் தான் கிழக்கு நோக்கிய தீபம் துன்பத்தினை நீக்கும் மேற்கு நோக்கிய தீபம் கடன் தொல்லை வராது. வடக்கு நோக்கிய தீபம் திருமணத் தடைகளை நீக்கும் என்பர். நெய் தீபம் சகல ஐஸ்வர்ய விருத்தி, நல்ல எண்ணை தீபம் ஆரோக்கியம் அளிக்கும். தேங்காய் எண்ணை தீபம் வசீகரம் தரும். இலுப்ப எண்ணை தீபம் சகல காரிய ஐஸ்வர்யங்களைத் தரும். வேப்ப எண்ணை குல தெய்வ அருள் கிடைக்கும். விளக்கு எண்ணையும் குலத்தினைக் காக்கும். புகழ் தரும். மேற்கூறப்பட்டுள்ள அனைத்தும் நமக்கு பரம்பரை பரம்பரையாய் கூறப்பட்டவை. விளக்கு தீபம் நம்மோடு பேசும் தெய்வம். ஆகவேத்தான் மற்ற எண்ணைகளை உதாரணம் பாமாயில், கடலை எண்ணை இவற்றினை கூடாது என நம் முன்னோர்கள் வலியுறுத்தி உள்ளனர். இது மட்டுமா? பஞ்சு திரியுடன் வாழை தண்டு நாரினை இணைத்து தீபம் ஏற்றினால் முன்னோர் சாபம் விலகும். தாமரை தண்டு சேர்த்து தீபம் ஏற்றினால் பாவங்கள் நீங்கும். எடுக்கன் வேர் கொண்டு விளக்கேற்றுவது பிள்ளையாருக்கு பிடிக்கும். வெற்றிலை வைத்து அதன் மீது தீபம் ஏற்றுவது தீய சக்திகளை விரட்டும். மாவிலை வைத்து அதன் மீது விளக்கு ஏற்றுவது வளம் தரும். மண் அகல் விளக்கில் தீபம் ஏற்றினால் பீடை விலகும் என்பதெல்லாம் நமக்கு நம் முன்னோர்கள் கூறிச் சென்றது. தீபத்தின் சிறப்பினை அறிந்து கொள்வதற்காகவே இவையெல்லாம் இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது. இது மட்டுமா? வெண் கடுகினை சிறு அளவில் மூட்டை போல் கட்டி எண்ணையில் நனைத்து வீட்டு வாசலில் தீபம் ஏற்றுபவர்களும் உண்டு. துர் சக்தி நீங்க, வராது இருக்க இவ்வாறு செய்வர். இரும்பு விளக்கில் நல்லஎண்ணை ஊற்றி சனிக்கிழமை வழிபட்டால் சனீஸ்வரருக்கு பிடிக்கும். திரியுடன் வசம்பு சேர்த்து தீபம் ஏற்றுவர். நெய் ஊற்றி, பச்சை கற்பூரம், ஏலக்காய் சேர்த்து விளக்கு ஏற்றுவர். கூட்டு எண்ணைகள் சேர்த்தும் அவரவர் வேண்டுதலுக்கு ஏற்ப தீபம் ஏற்றுவர். எலுமிச்சை பழ மூடியில் எண்ணை விட்டு தீபத்தினை ராகு காலத்தில் துர்க்கைக்கும் வேண்டுதலாக கோவில்களில் ஏற்றுவர். தேங்காய் உடைத்து தேங்காய் எண்ணை ஊற்றி விளக்கேற்றுவதும் பிரபலமான ஒன்று. மாவிளக்கு போடுவது என்பது அநேக இந்து மத வீடுகளில் நடக்கும் ஒன்றுதான். கார்த்திகை தீபம் அன்றும் பல இல்லங்களில் மாவிளக்கு போட்டு வழிபடுவர். பரிகார வழிபாடாக பூசணிக்காயினை இரண்டாக உடைத்து எண்ணை விட்டு பைரவ வழிபாடு தேய்பிறை அஷ்டமி அன்று செய்வர். இப்படி பல வழிகளில் தீபத்தின் மூலம் இறைவழிபாடு செய்யும் வழக்கம் தொன்று தொட்டு வருவது. அந்த தீபத்தினை விஸ்வரூபமாக வழிபாடு செய்வதுதான் கார்த்திகை திருநாள். முடிந்தவரை வீடு நிறைய விளக்குகளை 3 நாட்கள் தொடர்ந்து ஏற்றுவர். அண்ணாமலையாருக்கு மலையில் தீபம் ஏற்றிய உடன் வீடுகளில் விளக்கு ஏற்றுவர். அப்பம், பொரி, பாயாசம் என நைவேத்தியங்கள் செய்வர். பொதுவில் விளக்குகள் நல்ல எண்ணை கொண்டே ஏற்றப்படும். முருக பிரானுக்கு இலுப்ப எண்ணையில் சில தீபங்களாவது ஏற்றுவது சிறப்பு. பிரபஞ்சத்திற்கே முதல் ஒளி 2,40,000 முதல் 3,00,000 Big Bang ஆண்டுகள் நிகழ்விற்குப் பிறகு ஏற்றப்பட்டது எனக் கூறுவர். ஒளி இவ்வுலக வாழ்வில் அடிப்படை அறிகுறி. ஒளி சக்தி. பூமிக்கு பாதுகாப்பு ஒளியே. இதன் காரணமே அன்றாடம் சூரியனை வணங்கும் வழக்கம் ஏற்பட்டது. இந்த ஒளி நம் ஆத்ம ஒளியோடு சம்பந்தப்பட்டது. ஆகவே கார்த்திகை திருநாளில் இறைவனை ஒளியாய், ஜோதியாய் வழிபடுவோம். வளம் பெறுவோம்.