இந்த உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கு விசாரணையின்போது, ஆர்எஸ்எஸ் பேரணிக்கு முழுமையாக தடை விதிக்கும் எண்ணம் இல்லை, ஆனால் ஒவ்வொரு தெருவிலும் பேரணியை நடத்த அனுமதி அளிக்க முடியாது என தமிழ்நாடு அரசு தரப்பில் வாதிடப்பட்டது. சட்டம் ஒழுங்கு பிரச்சனை உள்ளதாகவும் கூறியது. ஏற்கனவே நடத்தப்பட்ட பேரணி அமைதியாக நடந்து முடிந்துள்ளதாக ஆர்.எஸ்.எஸ். தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் முகுல் ரோகத்கி, ஒரு அமைப்பு தான் விரும்பும் இடத்தில், ஊர்வலங்களை நடத்துவதற்கு தனி உரிமை இருக்க முடியுமா? என கேள்வி எழுப்பினார். ஆர்.எஸ்.எஸ். குறிப்பிட்ட வழித்தடங்களில் பேரணி நடத்துவதற்கு தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது, அதேநேரம் மற்ற பகுதிகளில் மூடப்பட்ட அரங்குகளில் பேரணிகளை நடத்துமாறு அறிவுறுத்துகிறது. பொது ஒழுங்கையும் அமைதியையும் பராமரிக்க இவ்வாறு அறிவுறுத்தப்பட்டது என்றும் முகுல் ரேகத்கி கூறினார்.
ஆர்.எஸ்.எஸ். தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் மகேஷ் ஜெத்மலானி வாதாடும்போது, அரசியலமைப்பு சட்டம் 19(1)(பி) பிரிவின் கீழ் ஆயுதங்கள் இல்லாமல் அமைதியாக ஒன்றுகூடும் உரிமையை, வலுவான காரணம் எதுவும் இல்லாமல் நிராகரிக்க முடியாது என்றார். பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பும் தடை செய்யப்பட்டதாக கூறி, சில பகுதிகளில் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு அரசு விதித்துள்ள தடை குறித்தும் அவர் கேள்வி எழுப்பினார். அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்ததையடுத்து வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.