No results found

    அம்மன் 28 நாட்கள் பச்சை பட்டினி விரதம் மேற்கொள்ள காரணம்...


    சக்தி தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது சமயபுரம் மாரியம்மன் கோவில். ஸ்ரீரங்கம் கோவிலின் மூலவரை போன்று, இக்கோவிலில் சுதையினாலான சுயம்புவடிவமாக 27 நட்சத்திரங்களின் ஆதிக்கங்களையும் தன்னுள் அடக்கி 27 எந்திரங்களாக திருமேனி பிரதிஷ்டை செய்து, இத்தலத்தில் மகாமாரியம்மன் அருள்பாலிப்பது தனிச்சிறப்பு ஆகும். அம்மனின் சுயம்பு திருமேனியில் நவக்கிரக ஆதிக்கத்தை உள்ளடக்கி நவக்கிரகங்களை நவ சர்ப்பங்களாக திருமேனியில் தரித்து அருள்பாலிப்பதால், அம்மனை தரிசனம் செய்வதன் மூலம் நவக்கிரக தோஷம் நீங்கும் என்பது ஐதீகம். மேலும் தட்சன் யாகத்துக்கு சென்ற தாட்சாயணியை தூக்கி சிவபெருமான் ருத்ரதாண்டவம் ஆடியபோது அம்மனின் திருக்கண் இப்பகுதியில் விழுந்ததால் இத்திருத்தலத்திற்கு கண்ணனூர் என்ற பெயர் இருந்து வருகிறது. மிகத்தொன்மையான உற்சவ அம்மனின் திருமேனியில் ஆயிரம் கண்கள் உள்ளன. இது, இத்தலத்தின் பெருமையை விளக்குவதாக அமைந்துள்ளது.

    இத்திருத்தலத்தில் அம்மன் அஷ்ட புஜங்களுடன் இருப்பது வேறு எந்த மாரியம்மன் கோவிலிலும் காணக்கிடைக்காத அரிய காட்சியாகும். மேலும், மாரியம்மன் வடிவங்களில் ஆதிபீடம் சமயபுரம் ஆகும். மும்மூர்த்திகளை நோக்கியும், மாயசூரனை வதம் செய்த பாவம் நீங்கவும், உலக நன்மைக்காகவும், இத்திருத்தலத்தில் தன்னை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு நோய்களும், தீவினைகளும் அணுகாது, சகல சவுபாக்கியங்களும் கிடைக்க மரபுமாறி அம்மனே பக்தர்களுக்காக 28 நாட்கள் பச்சை பட்டினி விரதம் மேற்கொள்வது இக்கோவிலின் தனிச்சிறப்பு ஆகும். ஆண்டுதோறும் மாசி மாத கடைசி ஞாயிறு முதல் பங்குனி மாத கடைசி ஞாயிறு வரை இந்த விரதம் கடைபிடிக்கப்படும். இந்த 28 நாட்களும் கோவிலில் அம்மனுக்கு தளிகை, நைவேத்தியம் கிடையாது. துள்ளுமாவு, நீர்மோர், கரும்பு, பானகம் மற்றும் இளநீர் மட்டுமே நைவேத்தியமாக படைக்கப்படுகிறது.

    Previous Next

    نموذج الاتصال