இதைத் தொடர்ந்து ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமைக் கழகத்தில் எடப்பாடி பழனிசாமி இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். தேர்தல் அதிகாரிகள் அவரது வேட்பு மனுவை பெற்றுக்கொண்டனர். இந்நிலையில் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: அதிமுகவை பற்றி எதுவும் தெரியாத கூட்டம் அரசியல் செய்துகொண்டிருக்கிறது. அடிப்படை உறுப்பினர்களால் மட்டுமே அதிமுக தலைமை தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். பிக்பாக்கெட் அடித்து செல்வது போன்று பொதுச்செயலாளர் தேர்தல் உள்ளது. அதிமுக பொதுக்குழுவுக்கு பிறகு தண்ணீர் பாட்டிலை பார்த்தால் அலர்ஜியாக உள்ளது.
ஈபிஎஸ் அணி மீது அதிமுக தொண்டர்கள் நம்பிக்கை வைத்திருந்தால் இடைத்தேர்தலில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். ஈரோடு இடைத்தேர்தலுக்காக இரட்டை இலை சின்னத்தை விட்டுக்கொடுத்தோம். ஈரோடு இடைத்தேர்தல் தீர்ப்பு எடப்பாடி பழனிசாமிக்கு எதிரானது. எங்களது பயணம் மக்கள் தீர்ப்பை எதிர்நோக்கி சென்று கொண்டிருக்கிறது. ஈபிஎஸ் அணியிடம் இருந்து அதிமுகவை மீட்டெடுப்பதே எங்களது நோக்கம். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா கட்சியை இப்படி தான் நடத்தினார்களா?. சர்வாதிகாரமாக அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை அறிவித்துள்ளனர். தமிழகத்தில் எங்கு சென்றாலும் ஈபிஎஸ்-க்கு எதிர்ப்பலை பாயும். வழக்கு நிலுவையில் இருக்கும்போது அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் நடத்த என்ன அவசரம். எங்களை கட்சியை விட்டு நீக்கும் தகுதி யாருக்கும் இல்லை. ஏப்ரல் 2-வது வாரத்தில் திருச்சியில் மாபெரும் மாநாடு நடத்தப்படும். மாநாடு நடத்திய பிறகு மாவட்டந்தோறும் தொண்டர்களை சந்திக்க உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.