நிகழ்ச்சியில் மதுரை ஆதீனம் ஹரிஹர சம்மந்த தேசிக பரமாச்சாரிய திருவடிகள் ஆன்மிக உரையாற்றுகிறார். கன்னியாகுமரி தொகுதி எம்.பி. விஜய் வசந்த், நெல்லை தொகுதி எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன், கிள்ளியூர் எம்.எல். ஏ. ராஜேஷ்குமார், கொல்லங்கோடு நகராட்சி தலைவர் ராணி ஆகியோர் வாழ்த்தி பேசுகிறார்கள். தொடர்ந்து விழா நாட்களில் தினமும் நிர்மால்ய தரிசனம், அபிஷேகம், உஷ பூஜை, கணபதி ஹோமம், தீபாராதனை மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது. 19-ந் தேதி காலையில் தூக்கநேர்ச்சை குலுக்கல் மற்றும் காப்புக்கட்டும் நிகழ்ச்சி நடக்கிறது. அன்று இரவு 9 மணிக்கு தூக்கக்காரர்களின் நமஸ்காரம் நடைபெறும். 21-ந் தேதி இரவு 7 மணிக்கு நடக்கும் பண்பாட்டு மாநாட்டை அமைச்சர் மனோதங்கராஜ் தொடங்கி வைக்கிறார். இதில் சிறப்பு விருந்தினர்களாக கேரள முன்னாள் டி.ஜி.பி. அலெக்சாண்டர் ஜேக்கப், கேரள முன்னாள் சுகாதார துறை மந்திரி சிவகுமார், நடிகர் கரமனை சுதீர், நாகர்கோவில் இந்து கல்லூரி செயலாளரும், தாளாளருமான நாகராஜன் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
23-ந் தேதி காலை 7.30 மணி முதல் தூக்கக்காரர்களின் உருள் நமஸ்காரம் நடக்கிறது. 24-ந் தேதி மாலையில் வண்டியோட்டம் எனப்படும் தூக்கத்தேர் முன்னோட்டம் நடக்கிறது. 25-ந்தேதி சனிக்கிழமை அதிகாலையில் தூக்கக்காரர்களின் முட்டுகுத்தி நமஸ்காரம், அம்மன் பச்சை பந்தலில் எழுந்தருளுதல் நடக்கிறது. தொடர்ந்து காலை 6.30 மணிக்கு பச்சிளம் குழந்தைகளுக்கு தூக்க நேர்ச்சை நிறைவேற்றும் நிகழ்ச்சி தொடங்குகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் தலைவர் ராமசந்திரன் நாயர், செயலாளர் மோகன் குமார், இணை செயலாளர் பிஜூ குமார், துணைத்தலைவர் சதிகுமாரன் நாயர், பொருளாளர் சீனிவாசன் தம்பி மற்றும் கமிட்டி உறுப்பினர்கள் செய்து வருகின்றனர்.