No results found

    கலாஷேத்ரா விவகாரம்- மகளிர் ஆணையம் விசாரணை


    சென்னை திருவான்மியூரில் கலாஷேத்ரா அறக்கட்டளை சார்பில் மத்திய கலாசார அமைச்சகத்தின் நேரடி நிதிஒதுக்கீட்டின் கீழ் கலாஷேத்ரா ருக்மணி தேவி கவின் கலை கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் படிக்கும் மாணவிகளுக்கு பேராசிரியர் ஒருவர் பாலியல் தொல்லை அளித்து வருவதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு அக்கல்லூரியின் முன்னாள் இயக்குனர், சமூக வலைதளங்களில் பதிவிட்டு இருந்தார். இந்த புகார் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தருமாறு தேசிய மகளிர் ஆணையம், தமிழக போலீசாருக்கு நோட்டீசு அனுப்பி இருந்தது. இந்த சம்பவத்தை தொடர்ந்து, பாலியல் தொந்தரவு கொடுத்த பேராசிரியர் உள்பட 4 பேர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, கல்லூரியில் படிக்கும் மாணவ-மாணவிகள் நேற்று கல்லூரி வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட தொடங்கினார்கள். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் 'எங்களுக்கு நீதி வேண்டும்' என்ற ஒற்றை கோஷத்தை வலியுறுத்தி போராட்டத்தை முன்னெடுத்தனர்.

    கல்லூரி நிர்வாகம் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக கூறினர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்காததால், போராட்டம் தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில் கலாஷேத்ரா கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக மத்திய கலாச்சார அமைச்சகம் மற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கல்லூரி மாணவர்கள் அமைப்பு கடிதம் அனுப்பி உள்ளது. இதையடுத்து கலாஷேத்ரா கல்லூரியில் பாலியல் தொல்லை புகார் தொடர்பாக மாநில மகளிர் ஆணையம் நேரில் விசாரணை நடத்த உள்ளது. தமிழ்நாடு மகளிர் ஆணைய தலைவர் குமரி நேரில் ஆய்வு செய்கிறார். பாலியல் தொல்லை புகார் குறித்து கலாஷேத்ரா கல்லூரி நிர்வாகத்திடம் மகளிர் ஆணைய தலைவர் கேட்டறிய உள்ளார்.

    Previous Next

    نموذج الاتصال