பந்துவீச்சில் முகமது ஷமி, முகமது சிராஜ், ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ் உள்ளிட்டோர் கட்டுக்கோப்புடன் பவுலிங் செய்வதை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர். ஆஸ்திரேலிய அணியும், இந்தியாவுக்கு நிகராக பலம் வாய்ந்ததாக விளங்குகிறது. ஆஸ்திரேலியாவின் கேப்டன் பொறுப்பை ஸ்டீவன் சுமித் கவனிக்கிறார். ஆல்-ரவுண்டர்கள் கிளைன் மேக்ஸ்வெல், மிட்செல் மார்ஷ் ஆகியோர் காயத்தில் இருந்து மீண்டு அணியுடன் இணைந்திருப்பது அவர்களுக்கு உற்சாகம் அளிக்கும். முழங்கை காயத்தில் இருந்து குணமடைந்துள்ள டேவிட் வார்னரும் ரன் வேட்டைக்கு ஆயத்தமாக உள்ளார். பந்துவீச்சில் ஆடம் ஜம்பா, மிட்செல் ஸ்டார்க், நாதன் எலிஸ் நம்பிக்கை அளிக்கிறார்கள்.
மொத்தத்தில் இரு அணிகளும் பந்துவீச்சு, பேட்டிங் இரண்டிலும் ஏறக்குறைய சரிசம பலத்துடன் மல்லுகட்டுவதால் அனல் பறக்கும் என்பதில் சந்தேகமில்லை. இந்திய அணி இந்த ஆண்டில் உள்ளூரில் ஆடிய 6 ஒரு நாள் போட்டிகளிலும் வாகை சூடியுள்ளது. இதே போல் ஆஸ்திரேலியா தனது கடைசி 6 ஒரு நாள் போட்டிகளிலும் வெற்றி பெற்றிருக்கிறது. இவர்களில் யாருடைய வீறுநடை முடிவுக்கு வரப்போகிறது என்பதை பார்ப்பதும் சுவாரஸ்யமாக இருக்கும். போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு: இந்தியா: சுப்மன் கில், இஷான் கிஷன், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ் அல்லது ரஜத் படிதார், லோகேஷ் ராகுல், ஹர்திக் பாண்ட்யா (கேப்டன்), ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ் அல்லது யுஸ்வேந்திர சாஹல் அல்லது வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்குர், முகமது சிராஜ், முகமது ஷமி அல்லது உம்ரான் மாலிக். ஆஸ்திரேலியா: டேவிட் வார்னர், டிராவிஸ் ஹெட், ஸ்டீவன் சுமித் (கேப்டன்), மார்னஸ் லபுஸ்சேன், மிட்செல் மார்ஷ் அல்லது மார்கஸ் ஸ்டோனிஸ், மேக்ஸ்வெல், அலெக்ஸ் கேரி, கேமரூன் கிரீன், மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஜம்பா, சீன் அப்போட் அல்லது நாதன் எலிஸ். பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.