No results found

    வதந்தி வீடியோ வெளியிட்ட விவகாரம்: பா.ஜனதா கட்சி பிரமுகருக்கு சமூக பொறுப்பு இல்லையா?- மதுரை ஐகோர்ட்டு கேள்வி


    தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவது குறித்த வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவியது. இது தொடர்பாக தமிழக போலீசார் விசாரணை நடத்தியதில், வடமாநில தொழிலாளர்கள் தொடர்பான வதந்தி வீடியோவை வெளியிட்டது டெல்லியை சேர்ந்த பா.ஜனதா பிரமுகர் பிரசாந்த்குமார் உம்ராவ் என தெரியவந்தது. இது தொடர்பாக அவர் மீது தூத்துக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த நிலையில் இந்த வழக்கில் தன்னை கைது செய்யாமல் இருக்க பிரசாந்த்குமார் உம்ராவ் மதுரை ஐகோர்ட்டில் முன்ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்தார். அதில், நான் டெல்லியில் பா.ஜனதா கட்சியின் முக்கிய பிரமுகராக உள்ளேன். டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராகவும் பணியாற்றி வருகிறேன். குறிப்பிட்ட வீடியோவை நான் தயாரிக்கவில்லை. எனக்கு வந்த வீடியோவை பார்வர்ட் மட்டும் செய்தேன். இதில் எந்தவித உட்கருத்தும் இல்லை.

    ஆனால் நான் அரசியல் கட்சியில் இருப்பதால் பழிவாங்கும் நோக்கோடு என்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே எனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வழக்கு இன்று நீதிபதி இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில் பிரசாந்த்குமார் உம்ராவ் வெளியிட்ட வீடியோவால் தமிழகத்தில் அசாதாரண சூழல் உருவானது. இருமாநில தொழிலாளர்களுக்கு இடையில் பிரச்சினை உருவாக்கும் விதமாக இவர் டுவிட் செய்துள்ளார். இது இவரின் முதல் டுவிட் கிடையாது. இது போன்ற பல சட்ட விரோதமான பொய்யான தகவல்களை டுவிட் செய்துள்ளார். எனவே இவருக்கு முன்ஜாமீன் வழங்கக்கூடாது என அரசு தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து நீதிபதி கூறுகையில், பிரசாந்த்குமார் உம்ராவ் ஒரு வழக்கறிஞர். ஏன் இதுபோன்ற வீடியோவை பார்வர்ட் செய்தார்? இதன் தீவிரத்தன்மை அவருக்கு தெரியாதா? இதனால் எவ்வளவு பிரச்சினை ஏற்படும்? அவர் எங்கு வேண்டுமானாலும் இருக்கட்டும். சமூக பொறுப்பு அவருக்கு இல்லையா? என கேள்வி எழுப்பினர். தொடர்ந்து ஒவ்வொரு நபருக்கும் சமூக பொறுப்பு இருக்க வேண்டும் என கூறிய நீதிபதி தீர்ப்பை ஒத்தி வைப்பதாக கூறினார்.

    Previous Next

    نموذج الاتصال