No results found

    விளையாட்டு போட்டிகளில் பதக்கம் வென்ற 160 வீரர்களுக்கு ரூ.2.25 கோடி ஊக்கத்தொகை- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்


    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில், தேசிய மற்றும் பன்னாட்டு விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற 160 வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு 2 கோடியே 25 லட்சம் ரூபாய் உயரிய ஊக்கத் தொகைக்கான காசோலைகளை வழங்கிடும் அடையாளமாக 8 விளையாட்டு வீரர்களுக்கும், 76 பயிற்றுநர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 8 பயிற்றுநர்களுக்கு பணிநியமன ஆணைகளையும் வழங்கினார்.

    அசாம் மாநிலம், கவுகாத்தியில் கடந்த 10.1.2020 முதல் 22.1.2020 வரை நடைபெற்ற கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகளில் 19 தங்கப்பதக்கம், 30 வெள்ளி பதக்கம் மற்றும் 20 வெண்கலப் பதக்கங்கள், என மொத்தம் 69 பதக்கங்களை வென்ற தமிழ்நாட்டை சேர்ந்த 137 விளையாட்டு வீரர்களுக்கு அரசின் ஊக்கத்தொகையாக 1 கோடியே 62 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கான காசோலைகள். கடந்த 2020 அக்டோபர் 10 முதல் 25 வரை நடை பெற்ற ஆசிய ஆன்லைன் நேஷன்ஸ் கோப்பைக்கான சதுரங்கப் போட்டியில் இந்திய மகளிர் அணி சார்பில் பங்கேற்று தங்கப் பத்தக்கங்கள் வென்ற பி.வி. நந்திதா மற்றும் ஆர்.வைஷாலி ஆகிய இருவருக்கும் உயரிய ஊக்கத் தொகையாக தலா 6 லட்சம் ரூபாய் வீதம் மொத்தம் 12 லட்சம் ரூபாய்க்கான காசோலைகள்.

    குஜராத் மாநிலம், காந்தி நகரில் கடந்த 21.3.2021 முதல் 25.3.2021 வரை நடைபெற்ற தேசிய அளவிலான 15-வது ஜுனியர் சாப்ட் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் தனிநபர் பிரிவில் 1 தங்கம், 1 வெள்ளி, 2 வெண்கலப் பதக்கங்களும், கலப்பு இரட்டையர் பிரிவில் 1 தங்கப் பதக்கம் மற்றும் குழுப்போட்டிகளில் 1 தங்கப் பதக்கம், என மொத்தம் 6 பதக்கங்களை வென்ற 9 விளையாட்டு வீரர்களுக்கு அரசின் உயரிய ஊக்கத் தொகையாக 21 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கான காசோலைகள். லண்டன், பர்மிங்காமில் கடந்த 10.8.2022 முதல் 20.8.2022 வரை நடைபெற்ற காமன்வெல்த் வாள்வீச்சு சாம்பியன்ஷிப் போட்டியில் மகளிர் பிரிவில் சேபர் குழுப் போட்டியில் வெண் கலப்பதக்கம் வென்ற ஜே.எஸ்.ஜெபர்லினுக்கு அரசின் உயரிய ஊக்கத் தொகையாக 10 லட்சம் ரூபாய்க்கான காசோலை.

    சென்னை, சத்யபாமா பல்கலைக்கழகத்தில் கடந்த 8.1.2020 முதல் 10.1.2020 வரை நடைபெற்ற அகில இந்திய பல்கலைக்கழங்களுக்கு இடையேயான கராத்தே போட்டிகளில் தனிநபர் போட்டியில் 1 தங்கப் பதக்கம், 1 வெள்ளிப் பதக்கம், 2 வெண்கலப் பதக்கம், ஆண்கள் குழுப் போட்டியில் 1 வெள்ளிப் பதக்கம் மற்றும் பெண்கள் குழுப்போட்டியில் 1 வெள்ளிப் பதக்கம், என மொத்தம் 6 பதக்கங்களை வென்ற 11 விளையாட்டு வீரர்களுக்கு அரசின் உயரிய ஊக்கத் தொகையாக 19 லட்சம் ரூபாய்க்கான காசோலைகள். என மொத்தம் 160 வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு 2 கோடியே 25 லட்சம் ரூபாய் உயரிய ஊக்கத் தொகைக்கான காசோலைகளை வழங்கிடும் அடையாளமாக 8 விளையாட்டு வீரர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உயரிய ஊக்கத் தொகைக்கான காசோலைகளை வழங்கினார். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் விளையாட்டு பயிற்றுநர்களுக்கான நேர்முக தேர்வு 2.3.2023 அன்று நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இந்த தேர்வில் பல்வேறு விளையாட்டுகளை சார்ந்த 187 விளையாட்டு பயிற்றுநர்கள் பங்கேற்றனர். தகுதி மற்றும் மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட 76 பயிற்று நர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 8 பயிற்றுநர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தலைமைச் செயலாளர் இறையன்பு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டுத் துறை ஆணைய உறுப்பினர் செயலாளர் ஜெ.மேகநாத ரெட்டி, ஆகியோர் கலந்து கொண்டனர்.


    Previous Next

    نموذج الاتصال