No results found

    முதல் முறையாக ஜனாதிபதி திரவுபதி முர்மு நாளை கன்னியாகுமரி வருகை- பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்


    இந்திய ஜனாதிபதியாக பதவியேற்ற பிறகு முதல் முறையாக திரவுபதிமுர்மு நாளை (சனிக்கிழமை) காலை 8.30 மணிக்கு திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டு காலை 9 மணிக்கு கன்னியாகுமரி வருகிறார். கன்னியாகுமரியில் உள்ள அரசு விருந்தினர் மாளிகை வளாகத்தில் அமைந்துள்ள ஹெலிகாப்டர் தளத்தில் வந்து இறங்கும் அவருக்கு தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, குமரி மாவட்ட கலெக்டர் பி.என்.ஸ்ரீதர் மற்றும் உயர் அதிகாரிகள் முக்கிய விருந்தினர்கள் வரவேற்கிறார்கள். வரவேற்பு நிகழ்ச்சி முடிந்ததும் அரசு விருந்தினர் மாளிகையில் சிறிது நேரம் ஓய்வு எடுக்கிறார். அதன் பிறகு அவர் அங்கு இருந்து கார்மூலம் புறப்பட்டு கன்னியாகுமரி பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக படகு துறைக்கு செல்கிறார். அங்கிருந்து தனிப்படகு மூலம் கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு செல்கிறார். அவரை விவேகானந்த கேந்திர அகில பாரத தலைவர் பாலகிருஷ்ணன் மற்றும் கேந்திர நிர்வாகிகள் வரவேற்கிறார்கள்.

    பின்னர் ஜனாதிபதி திரவுபதி முர்மு விவேகானந்தர் நினைவு மண்டபத்தை சுமார் 30 நிமிடம் சுற்றி பார்க்கிறார். அதன் பிறகு அங்கிருந்து அதே படகு மூலம் கரைக்கு திரும்புகிறார். பின்னர் கார் மூலம் விவேகானந்தபுரத்தில் உள்ள விவேகானந்தா கேந்திராவுக்கு செல்கிறார். அங்குள்ள ராமாயண தரிசன சித்திர கண்காட்சி கூடத்தை பார்வையிடுகிறார். அதன் பின்னர் பாரத மாதா கோவிலுக்கும் செல்கிறார். பின்னர் காலை 11.30 மணிக்கு கன்னியாகுமரியில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் திருவனந்தபுரம் புறப்பட்டு செல்கிறார். கவர்னர் வருகையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. பாதுகாப்புபணியில் 1500 போலீசார் நியமிக்கப்பட உள்ளனர். ஜனாதிபதி வருகையையொட்டி கன்னியாகுமரி நகரப் பகுதி முழுவதும் போலீஸ் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டு உள்ளது. அவர் ஹெலிகாப்டரில் வந்து இறங்கும் ஹெலிகாப்டர் தளம், அவர் தங்கி இருக்கும் அரசு விருந்தினர் மாளிகை, பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக படகுத்துறை, விவேகானந்தர் நினைவு மண்டபம், விவேகானந்த கேந்திராவில் உள்ள ராமாயண தரிசன சித்திர கண்காட்சி கூடம் மற்றும் பாரத மாதா கோவில்ஆகிய இடங்களில் போலீசார் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனை நடத்தி வருகிறார்கள்.மேலும் போலீஸ் மோப்பநாய் மூலமும் போலீசார் அவர் செல்லும் பாதைகளில் சோதனை நடத்தி வருகிறார்கள். கன்னியாகுமரியில் ஜனாதிபதி ஓய்வெடுக்கும் புதிய அரசு விருந்தினர் மாளிகை புதுப்பிக்கும் பணிதீவிரமாக நடந்து வருகிறது. கன்னியாகுமரியில் இன்று கடற்கரைக்கு செல்லவும் பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டது. படகு போக்குவரத்தும் ரத்து செய்யப்பட்டது.

    Previous Next

    نموذج الاتصال