No results found

    Google Tamil News | ஈஸ்வரன் கோவிலுக்கு சென்ற ஜமாத் அமைப்பு நிர்வாகிகள்- மத நல்லிணக்கத்தை விரும்புவதாக பேட்டி


    கோவையில் கடந்த 23-ந் தேதி நடந்த கார் வெடிப்பு சம்பவத்தில் உக்கடத்தை சேர்ந்த ஜமேஷா முபின் என்பவர் உயிரிழந்தான். விசாரணையில் இது திட்டமிட்ட தாக்குதல் என்பது தெரியவந்தது. இதுகுறித்து மாநகர போலீசார் விசாரணை நடத்தி 6 பேரை கைது செய்தனர். கார் வெடிப்பு சம்பவம் நிகழ்ந்ததை அடுத்து கோவையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டது. ஜமாஅத் மற்றும் உலமாக்களை அழைத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். ஜமாஅத் நிர்வாகிகள், மதவாதத்தை நாங்கள் ஒருபோதும் ஆதரிக்க மாட்டோம். போலீசாருக்கு முழு ஒத்துழைப்பு அளிப்போம். தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.

    இந்த நிலையில் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தவும், அமைதியை நிலைநாட்டும் வகையிலும் ஜமாஅத் கூட்டமைப்பு நிர்வாகிகள் கோட்டை ஈஸ்வரன் கோவிலுக்கு செல்ல முடிவு செய்தனர். அதன்படி இன்று கோட்டைமேடு பகுதியை சேர்ந்த பெரிய பள்ளிவாசல், சின்ன பள்ளிவாசல், கேரள சுன்னத் ஜமா அத் நிர்வாகிகள், கோவை மாவட்ட அனைத்து சுன்னத் ஜமா அத்தின் பொதுச்செயலாளர் இனாயத்துல்லா தலைமையில் 15 பேர் கோட்டை ஈஸ்வரன் கோவிலுக்கு சென்றனர். அவர்களை கோட்டை ஈஸ்வரன் கோவில் பூசாரிகள், கோவில் செயல் அலுவலர் உள்ளிட்ட நிர்வாகிகள் சால்வை அணிவித்து கைகூப்பி வரவேற்றனர். பின்னர் அவர்களை கோவிலுக்கு அழைத்து சென்றனர்.

    அங்கு ஒரு அறையில் கோவில் நிர்வாகிகள், பூசாரிகள், ஜமாஅத் நிர்வாகிகள் ஒன்றாக அமர்ந்து கலந்துரையாடினர். அப்போது பழைய நினைவுகளை அவர்கள் பகிர்ந்து கொண்டனர். தேநீர் குடித்த பிறகு ஜமாத் நிர்வாகிகள் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர். அவர்களை கோவில் நிர்வாகிகள் வழியனுப்பி வைத்தனர். பின்னர் கோவை மாவட்ட அனைத்து சுன்னத் ஜமா அத் பொதுச் செயலாளர் இனாயத்துல்லா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:- 3 ஜமா அத் நிர்வாகிகளும் மதநல்லிணக்க வருகையாக கோட்டை ஈஸ்வரன் கோவிலில் நிர்வாகிகளை சந்தித்து உரையாடினோம். கோவையில் சென்ற வாரம் நடந்த கார் குண்டு வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து ஏற்பட்ட பதற்றமும், பல்வேறு சமூகத்திற்கு இடையில் ஒரு பதட்டமான சூழ்நிலை உருவானதை நாம்அறிவோம்.

    இஸ்லாமியர்களாகிய நாங்கள் 7 தலைமுறைகளாக இந்த கோட்டைமேட்டில் வாழ்ந்து வருகிறோம். இங்கு இருக்கக்கூடிய சங்கமேஸ்வரர் கோவில், இந்த தெருவில் அமைந்துள்ள மசூதி மற்றும் சுற்றுமுள்ள பகுதிகளில் உள்ள மக்கள் அனைவரும் ஒற்றுமையோடு, அண்ணன் தம்பிகளாக வாழ்ந்து வருகிறோம். எங்கள் பண்டிகைகளுக்கு, நாங்கள் விருந்தோம்பி, ஒருவருக்கொருவர் 200 ஆண்டுகளாக ஒற்றுமையாக வாழ்ந்து வருகிறோம். இந்த சூழ்நிலையில் நடந்த கார் வெடிப்பு சம்பவத்தை கோட்டைமேட்டில் உள்ள ஜமாத் கண்டிக்கிறது. இஸ்லாம் ஒருபோதும் வன்முறையை தூண்டும் மார்க்கம் அல்ல. நாங்கள் அமைதியை போதிக்கிறோம். இங்கு வாழும் மக்கள் அண்ணன் தம்பிகளாக வாழ்ந்து, சிறுபான்மை மக்கள் அனைவரோடும், பெரும்பான்மை மக்களோடும் ஒரு நல்லிணக்கத்தோடு வாழ்வதையை விரும்புகிறோம்.

    ஆகவே இந்த வருகை மதநல்லிணக்கம் பேணுவதற்காக தான். இதை தொடர்ந்து கோவையில் எங்களது ஜமாத்துகள் ஒன்றிணைந்து பல்வேறு வர்த்தக ரீதியாகவும் மற்றும் அனைத்து மசூதிகளும், சிறுபான்மை, பெரும்பான்மை மக்களோடு இணைந்து நற்பணிகள் செய்வது சம்பந்தமாக திட்டமிட்டு செயலாற்ற உள்ளோம். எந்தவிதமான மதபூசலுக்கும், எந்தவிதமான அரசியலுக்கு ஆட்பட்டு விடக்கூடாது என்பதில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம். ஆகவே உங்களோடு நாங்கள். எங்களோடு நீங்கள் என்ற தாரக மந்திரத்தை நாங்கள் முன்னெடுத்து இன்று சங்கேமஸ்வரர் கோவில் நிர்வாகிகளிடம் உரைத்தோம். அவர்களும் மகிழ்ச்சியோடு எங்களை வரவேற்று சால்வை அணிவித்து கவுரப்படுத்தினர். அவர்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம். அனைவரும் ஒன்றிணைந்து கோவையை தமிழகத்தில் மத அமைதி, மதநல்லிணக்கத்திற்கு ஒரு முன்னுதாரணமாக இடமாக மாற்றுவோம். எந்தவொரு பயங்கரவாதத்துக்கும் இடம் கொடுக்க மாட்டோம். எந்த வகையில் பயங்கரவாதம் வந்தாலும் நாங்கள் இடம் கொடுக்க மாட்டோம். இவ்வாறு அவர் கூறினார். கோவிலில் நடந்த கலந்துரையாடல் குறித்து கேட்டபோது இந்த தெருவில் விளையாடியது மற்றும் தேரோட்டம் நடத்தப்படும்போது அளித்த ஒத்துழைப்பு குறித்து நினைவு கூர்ந்தோம். இரு சமூகமும் இணைந்து மதநல்லிணக்கத்துடன் ஒற்றுமையை வலியுறுத்துவோம் என பேசினோம் என்றார்.

    Previous Next

    نموذج الاتصال