No results found

    Google Tamil News | கவர்னரை திரும்பபெற கோரி கடிதம்: தி.மு.க.-கூட்டணி எம்.பி.க்கள் அறிவாலயம் சென்று கையெழுத்திட்டனர்


    தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை திரும்ப பெறக்கோரி தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சமீபத்தில் கூட்டாக அறிக்கை வெளியிட்டிருந்தனர். இதன் அடுத்த கட்டமாக ஜனாதிபதியிடம் முறையிடவும் தி.மு.க. முடிவு செய்துள்ளது. இதற்காக தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி., தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி எம்.பி.க்களுக்கு ஒரு கடிதம் எழுதி இருந்தார். அந்த கடிதத்தில் கவர்னர் ஆர்.என்.ரவியை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தி ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்தித்து மனு அளிக்க தி.மு.க. முடிவு செய்துள்ளது. தி.மு.க. மற்றும் தி.மு.க.வுடன் ஒருமித்த கருத்து கொண்ட அரசியல் கட்சிகளின் எம்.பி.க்கள் அனைவரும் தி.மு.க. தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயம் வந்து ஜனாதிபதியிடம் கொடுக்க உள்ள கடிதத்தில் கையெழுத்திட வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

    கவர்னர் ஆர்.என்.ரவிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் கட்சிகள் இதற்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதைத் தொடர்ந்து ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ எம்.பி., விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் எம்.பி. ஆகியோர் அறிவாலயம் சென்று அந்த கடிதத்தில் கையெழுத்திட்டனர். தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி., தொ.மு.ச. தொழிற்சங்கம் சண்முகம் எம்.பி., ஜெகத்ரட்சகன், காங்கிரஸ் எம்.பி.க்கள் விஷ்ணு பிரசாத், ஜெயக்குமார், உள்ளிட்ட எம்.பி.க்கள் நேற்று கையெழுத்திட்டனர். தமிழச்சி தங்கபாண்டியன், பார்த்தீபன், கல்யாண சுந்தரம், ராமலிங்கம் உள்ளிட்ட எம்.பி.க்கள் இன்று காலையில் அறிவாலயம் சென்று கையெழுத்திட்டனர். தி.மு.க. எம்.பி.க்களும் கூட்டணி கட்சி எம்.பி.க்களும் அந்த கடிதத்தில் தொடர்ந்து கையெழுத்திட்டு வருகின்றனர். எனவே விரைவில் ஜனாதிபதியை சந்தித்து இந்த கடிதத்தை எம்.பி.க்கள் வழங்க உள்ளனர்.

    Previous Next

    نموذج الاتصال