No results found

    Google Tamil News | பிரதமரை தொடர்ந்து அமித்ஷாவை சந்திக்கும் ஈ.பி.எஸ்- ஓ.பி.எஸ்


    மத்திய அமைச்சர் அமித்ஷா இன்று சென்னையில் நடைபெறும் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவன விழாவில் கலந்து கொள்கிறார். இதற்காக நேற்று தனி விமானம் மூலம் சென்னை வந்தார். அங்கிருந்து காரில் கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் ஓய்வெடுப்பதற்காக தங்கினார். திண்டுக்கல்லில் நேற்று நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துக் கொண்ட பிரதமர் மோடியை ஈபிஸ் மற்றும் ஓபிஎஸ் சந்தித்தனர். தொடர்ந்து இன்று அமித்ஷாவையும் இருவரும் சந்தித்து பேச வாய்ப்புள்ளதாக ஏற்கனவே கூறப்பட்டது. இந்நிலையில், அமித்ஷாவை ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் இன்று சந்திக்க இருப்பது உறுதியாகி உள்ளது.

    அதன்படி, இன்று காலை 11.05 மணிக்கு ராஜ்பவனில் இருந்து கார் மூலம் புறப்பட்டு வாலாஜா சாலையில் உள்ள கலைவாணர் அரங்கத்திற்கு 11.25 மணிக்கு வருகிறார். அங்கு காலை 11.30 மணி முதல் பிற்பகல் 12.50 வரை நடக்கும் இந்தியா சிமெண்ட்ஸ் 75-வது ஆண்டு விழா நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசுகிறார். பின்னர் அங்கிருந்து பிற்பகல் 2.05 மணிக்கு அவர் புறப்பட்டு தியாகராயநகரில் உள்ள பா.ஜ.க. அலுவலகத்திற்கு 2.20 மணிக்கு வருகிறார். பிற்பகல் 3.25 மணிவரை அங்கிருந்து கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை மேற்கொள்கிறார். இதனிடையே மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேச ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் தரப்பில் இருந்து நேரம் கேட்கப்பட்டது. அதன்படி, இன்று பிற்பகல் ஓ.பன்னீர் செல்வம், மத்திய மந்திரி அமித்ஷாவை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், ஒன்றுபட்ட அதிமுக குறித்து ஓ.பி.எஸ் பேச உள்ளதாகவும் கூறுப்படுகின்றது.

    Previous Next

    نموذج الاتصال