கேரளாவைச் சேர்ந்தவர் ஆதிலா. இவர் தனது தோழி பாத்திமா நூராவுடன் இணைந்து வாழ விரும்பினார். லெஸ்பியன் ஜோடியான இவர்களுக்கு பெரும் எதிர்ப்பு கிளம்பியது. குறிப்பாக பாத்திமா நூராவின் குடும்பத்தினர் அவரை ஆதிலாவிடம் இருந்து பிரித்து மறைத்தனர். இது தொடர்பாக ஆதிலா போலீசில் புகார் கொடுத்தார். மேலும் பாத்திமா நூராவை கண்டுபிடித்து தரும்படி கோர்ட்டில் ஹேபியஸ் கார்பஸ் மனுவும் தாக்கல் செய்தார். அதன்படி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட பாத்திமா, ஆதிலாவுடன் சேர்ந்து வாழ விருப்பம் தெரிவித்தார். இதற்கு கோர்ட்டு அனுமதி வழங்கியதை தொடர்ந்து 2 பேரும் சென்னையில் சேர்ந்து வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் ஆதிலா-பாத்திமா நூரா ஜோடி, பாரம்பரிய திருமண உடைகளை அணிந்துகொண்டு, பின்னணியில் கடலைத் தவிர வேறு எதுவும் இல்லாமல் மோதிரங்களை மாற்றிக் கொண்டது போன்ற படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. இதன் மூலம் அவர்கள் திருமணம் செய்து கொண்ட தாகவும், அதற்கு முந்தைய நிச்சயதார்த்த போட்டோ ஷூட் தான் இது எனக் கருதி பலரும் வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்த நிலையில் இருவரும் தாங்கள் நிச்சயதார்த்தமோ, திருமணமோ செய்து கொள்ளவில்லை என தெரிவித்துள்ளனர். இது போட்டோஷூட்டின் ஒரு பகுதி தான் என அவர்கள் கூறினர். படங்களின் கருப்பொருளைப் பார்த்தால் குழப்பம் புரியும் என்று ஆதிலா தெரிவித்தார்.