No results found

    குற்றவாளியை பிடிக்க சென்றபோது போலீஸ் துப்பாக்கி சூடு... பாஜக தலைவரின் மனைவி பலியான சோகம் | Google Tamil News


    உத்தரகாண்ட் மாநிலத்தின் ஜஸ்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில், சுரங்க மாபியாவைச் சேர்ந்த ஜாபர் என்பவரை பிடிப்பதற்காக உத்தர பிரதேச போலீசார் அந்த கிராமத்தை நேற்று சுற்றி வளைத்தனர். அப்போது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். ஆனால் துப்பாக்கி குண்டு உள்ளூர் பாஜக தலைவர் குர்தாஜ் புல்லாரின் மனைவி குர்பீரித் கவுர் (வயது 28) மீது பாய்ந்தது. 5 உ.பி. போலீஸ்காரர்கள் காயமடைந்தனர். இந்த சம்பவம் இரு மாநில காவல்துறைகளுக்கிடையே பிரச்சனையை உருவாக்கி உள்ளது. உத்தர பிரதேசத்தின் மொராதாபாத்தில் இருந்து ஜாபரை போலீசார் பிடிக்க முயன்றபோது அவர் அங்கிருந்து தப்பி, எல்லை வழியாக அண்டை மாநிலமான உத்தரகாண்ட்டில் புகுந்து பாஜக தலைவர் புல்லாரின் பண்ணை வீட்டில் தஞ்சம் புகுந்துள்ளார். மொராதாபாத் போலீசார் அங்கு சென்றபோது மோதல் ஏற்பட்டதால் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது. இதில் புல்லாரின் மனைவி உயிரிழந்ததாக கூறப்படுகிறது. உ.பி. போலீசார் மீதும் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது.

    பாஜக தலைவரின் மனைவி இறந்ததையடுத்து கோபமடைந்த கிராமத்தினர், 4 போலீஸ்காரர்களை சிறைப்பிடித்து அவர்களிடம் இருந்த ஆயுதங்களை கைப்பற்றியதாக கூறப்படுகிறது. மிகவும் அலட்சியமாக துப்பாக்கி சூடு நடத்தி பெண்ணை கொலை செய்தது தொடர்பாக உ.பி. போலீசார் மீது உத்தரகாண்ட் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். பாஜக தலைவர் புல்லார் குற்றவாளியை மறைக்க முயன்றதாக மொரதாபாத் போலீஸ் அதிகாரி குற்றம்சாட்டினார். ஆனால் இந்த குற்றச்சாட்டை புல்லார் மறுத்தார். உள்ளூர் மக்களுக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் எதுவும் ஏற்படவில்லை, போலீசார் வந்ததும் துப்பாக்கியால் சுட்டனர். நாங்கள் அவர்களை சிறைப்பிடிக்கவில்லை, உத்தரகாண்ட் போலீசில் அவர்களை ஒப்படைத்தோம் என புல்லார் விளக்கம் அளித்தார். இந்த களேபரத்துக்கு மத்தியில், போலீசார் தேடிச் சென்ற குற்றவாளி ஜாபர் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார்.

    Previous Next

    نموذج الاتصال