முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சென்னை தி.நகரில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவு இல்லத்தில் கொடி ஏற்றி அ.தி.மு.க. 50-வது ஆண்டு நிறைவு விழாவை கொண்டாடுகிறார். இந்த நிலையில் அ.தி.மு.க. ஆண்டு விழாவை சசிகலாவும் கொண்டாட திட்டமிட்டுள்ளார். சென்னை மணப்பாக்கம் ராமாவரம் தோட்டத்தில் உள்ள எம்.ஜி.ஆர். காது கேளாதோர், வாய் பேசாதோர் பள்ளியில் சசிகலா நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்கான விழாவுக்கு ஏற்பாடுகள் நடந்து வந்தன. ஆனால் சசிகலா, அ.தி.மு.க. 51-ம் ஆண்டு தொடக்க விழாவை ராமாவரம் தோட்டத்தில் கொண்டாட அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது. சசிகலா விழா நடத்த இடம் தர எம்.ஜி.ஆர். குடும்ப உறுப்பினர்களில் சிலர் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.
இது தொடர்பாக கிடைத்த தகவல்கள் வருமாறு:- ஜெயலலிதா மறைவுக்கு பிறகு சசிகலா அ.தி.மு.க. பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்த நேரத்தில் அவரது கையால் பள்ளி மாணவர்களுக்கு காது கேட்கும் கருவிகள் வழங்கப்பட்டன. இதற்கான மொத்த செலவை அப்போது அமைச்சராக இருந்த ஒருவர் ஏற்றார். ஆனால் சசிகலா சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறைக்கு சென்றதால் கருவிகள் வாங்கிய நிறுவனத்துக்கு அந்த அமைச்சர் பணம் கொடுக்கவில்லை. எனவே மாணவர்களுக்கு வழங்கிய கருவிகளை அந்த நிறுவனம் திரும்ப பெற்று விட்டது. அதேபோல் மற்றொரு விழாவில் பள்ளி வளர்ச்சிக்கு சசிகலா தரப்பில் வழங்கிய நன்கொடைக்கான காசோலையும் திரும்பி விட்டதாக கூறப்படுகிறது. எம்.ஜி.ஆர். காது கேளாதோர், வாய் பேசாதோர் பள்ளி நிர்வாகத்தினர் சசிகலா மீது அதிருப்தியில் உள்ளனர்.
எனவே சசிகலா விழா நடத்த எம்.ஜி.ஆர். உறவினர்கள் திடீரென்று எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேற்கண்ட தகவலை கட்சி வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன. இந்த நிலையில் சசிகலாவின் கணவர் நடராஜனின் தம்பி ராமச்சந்திரன், எம்.ஜி.ஆர். குடும்பத்தை சேர்ந்த மற்றொருவரிடம் விழாவுக்கு அனுமதி பெற்று தருமாறு பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து ராமாவரம் தோட்டத்தில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு சசிகலா மாலை அணிவிக்கவும், வீட்டின் வெளியே நலத்திட்ட உதவிகளை வழங்கவும் முடிவு செய்யப்பட்டது. ஆனால் இதற்கும் மறைமுகமாக எதிர்ப்பு கிளம்பி உள்ளது. விழாவுக்கு அனுமதி தரக்கூடாது என்று பள்ளி நிர்வாகம் சார்பில் நந்தம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
அந்த புகார் மனுவில் கூறி இருப்பதாவது:- ராமாவரம் தோட்டத்தில் உள்ள எம்.ஜி.ஆர். காது கேளாதோர், வாய் பேசாதோர் பள்ளியில் வருகிற 17 மற்றும் 18-ந்தேதிகளில் விளையாட்டு விழா மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடக்கின்றன. அதில் வங்காளதேச தூதரக அதிகாரிகள் பங்கேற்கிறார்கள். இந்த விழாவுக்கு எந்தவிதமான இடையூறும் இல்லாதபடி பாதுகாப்பு வழங்க வேண்டும். மேலும் அன்றைய தினம் பள்ளி வளாகத்தில் வேறு பொது நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி தரக்கூடாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. சசிகலா இதற்கு முன்பு ராமாவரம் தோட்டத்தில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய நிலையில் தற்போது அவருக்கு எம்.ஜி.ஆர். குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்து இருப்பது அவருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.