இதில் அப்பகுதியைச் சேர்ந்த நவீன், ஷபீக், அபுபக்கர் ஆகிய 3 பேருக்கு தலையில் வெட்டு விழுந்தது. இதில் காயம் அடைந்த 3 பேரும் அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இதுபற்றி தகவல் கிடைத்ததும் உயர் அதிகாரிகள் போலீஸ் படையுடன் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அப்போதும் ரவுடிக் கும்பலை சேர்ந்தவர்கள் அடங்கவில்லை. ஆலந்தூர் ஆபிரகாம் நகரில் உள்ள சித்தர் கோவில் அருகே காலி மைதானம் ஒன்று உள்ளது. இந்த காலி மைதானத்துக்கு சென்ற ரவுடிக்கும்பல் அங்கு பெட்ரோல் குண்டுகளையும் சரமாரியாக வீசியது. இதில் பெட்ரோல் குண்டுகள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறின.
அப்போது அவர்களை பிடிக்க சென்ற போலீசார் மீதும் குண்டுகள் வீசப்பட்டன. இதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. பின்னர் ரவுடிக்கும்பல் அங்கிருந்து தப்பி ஓடி தலைமறைவானது. இதற்கிடையே தனியார் ஆஸ்பத்திரி சார்பில் சிகிச்சைக்காக கூடுதல் கட்டணம் கேட்பதாக கூறி காயம் அடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பின்னர் போலீசார் விைரந்து சென்று அவர்களிடம் சமாதான பேச்சு நடத்தினர். இதன் பிறகே மறியல் கைவிடப்பட்டது. ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றவர்களில் நவீன், அபுபக்கர் ஆகியோர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். ஷபீக் மட்டும் மேல் சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ரவுடிகள் ரகளையில் ஈடுபட்டது ஏன்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில் 2 ரவுடிகளுக்கிடையே ஏற்பட்ட பழைய முன் விரோதமே மோதலுக்கு முக்கிய காரணமாக அமைந்திருந்தது தெரிய வந்தது. ஆதம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ரவுடிகளான நாகூர் மீரான், ராபின் இருவரும் எதிர் எதிர் கோஷ்டிகளாக செயல்பட்டு வந்துள்ளனர். இவர்களில் நாகூர் மீரான் கடந்த ஆண்டு வெட்டிக் கொலை செய்யப்பட்டார். ராபினும் அவரது கூட்டாளிகளுமே இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டதாக போலீஸ் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. நாகூர் மீரான் கொலைக்கு பழிக்கு பழி வாங்குவதற்காக அவனது ஆட்கள் ராபினை தேடி வந்துள்ளனர்.
அப்போது ராபினின் உறவினரான அனில் என்பவர் நாகூர் மீரானின் ஆட்களிடம் சிக்கியுள்ளார். அவரை கடத்திச்சென்ற ரவுடிகள் ராபின் இருக்கும் இடத்தை கேட்டு அடித்து உதைத்துள்ளனர். பின்னர் ஆதம்பாக்கம் பகுதிக்கு அழைத்து வந்து இறக்கி விட்டுச் சென்றுள்ளனர். இதன் தொடர்ச்சியாகவே ரவுடிகள் வெடிகுண்டு வீச்சு சம்பவத்தில் ஈடுபட்டிருப்பது தெரிய வந்துள்ளது. இந்த சம்பவத்தை தொடர்ந்து ஆலந்தூர் பகுதியில் நேற்று இரவு முதல் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். ரவுடிகளுக்கிடையே மோதல் சம்பவங்கள் ஏதும் நடைபெற்று விடக்கூடாது என்பதற்காக போலீசார் ரோந்து சுற்றி வருகிறார்கள். அப்பகுதி முழுவதும் போலீசார் கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்தி உள்ளனர். சென்னை மாநகர் முழுவதும் ரவுடிகள் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில் பெட்ரோல் குண்டுகளை வீசி ரவுடிகள் பொதுமக்களை அச்சுறுத்தி இருப்பது போலீஸ் உயர் அதிகாரிகள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.