No results found

    தி.நகரில் தீபாவளி கூட்டம் அதிகரிப்பு- 300 கேமராக்கள் பொருத்தி கண்காணிப்பு பணிகள் தீவிரம் | Google Tamil News


    தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஒரு வாரமே இருக்கும் நிலையில் பொதுமக்கள் ஆடைகள், நகைகள் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகிறார்கள். இதனால் சென்னையில் வணிக பகுதிகள் அனைத்துமே களைகட்டி வருகின்றன. கடைவீதிகளில் பொதுமக்கள் அதிக அளவில் குவிந்து வருகிறார்கள். சென்னையில் முக்கிய வணிக பகுதியான தி.நகரில் தீபாவளியையொட்டி ஆடைகள், நகைகள் உள்ளிட்ட பொருட்களை வாங்க பொதுமக்கள் கூட்டம் அலைமோதுகிறது. நேற்றும், இன்றும் விடுமுறை நாட்கள் என்பதால் அதிக அளவில் கூட்டம் காணப்படுகிறது. குறிப்பாக ரங்கநாதன் தெருவில் நடப்பதற்கு இடம் கூட கிடைக்காமல் மனித தலைகளாகவே காணப்படுகிறது. தீபாவளி கூட்டத்தில் பொதுமக்களின் நகை, பணம் திருட்டு போகாமல் தடுக்க தி.நகர் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

    மேலும் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக வாகன போக்குவரத்திலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் தி.நகர் ரங்கநாதன் தெருவில் பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் பார்வையிட்டார். அந்த பகுதியில் நடந்து சென்றும் ஆய்வு செய்தார். மேலும் அங்கு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றிய விவரங்களை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். தி.நகர் பகுதியில் தற்போது கண்காணிப்பு பணிக்காக முதல்முறையாக 6 எப்.ஆர்.எக்ஸ். கேமரா என்ற அதி நவீன கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே குற்ற செயல்களில் ஈடுபட்டவர்கள் அந்த பகுதியில் திரிந்தால் அவர்களை தனியாக கண்டறிந்து அடையாளம் காண இந்த கேமரா உதவும். தி.நகர், பாண்டிபஜார் உள்ளிட்ட பகுதிகளில் 300 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் கடை வீதிகளில் போலீசார் சாதாரண உடையில் கண்காணித்தும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். பொதுமக்களுக்கு உதவி செய்வதற்காக போலீஸ் உதவி மையமும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் கார்கள், ஆட்டோக்கள், தனித்தனியே செல்லும் வகையில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வகையில் போக்குவரத்திலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    Previous Next

    نموذج الاتصال