கடந்த சில மாதங்களாக பரபரப்பாக சென்று கொண்டிருந்த இந்த வழக்கு திடீரென சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை தனிப்படை போலீசார் சி.பி.சி.ஐ.டி.யிடம் ஒப்படைக்கும் நடவடிக்கைகளை தொடங்கினர். முதற்கட்டமாக நேற்று சசிகலா உள்பட 326 சாட்சிகளிடம் நடத்தப்பட்ட விசாரணை அறிக்கை ஊட்டி கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான போலீசார் 1500 பக்கம் கொண்ட விசாரணை அறிக்கையை கோர்ட்டில் தாக்கல் செய்தனர். விசாரணையின் போது பெறப்பட்ட பதிவுகள், ஆவணங்கள், வாக்குமூல விவரங்கள் அதில் இடம்பெற்றுள்ளன.
இந்தநிலையில் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட கொடநாடு வழக்கின் ஆவணங்கள் மற்றும் வாக்குமூலங்களின் நகல்கள் இன்று சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது. நீலகிரி மாவட்ட போலீஸ் அலுவலகத்துக்கு இன்று காலை வந்த சி.பி.சி.ஐ.டி. போலீசார் ஆவணங்களை பெற்றுச் சென்றனர். இதைத்தொடர்ந்து கொடநாடு வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் இன்று ஏற்றுக் கொண்டுள்ளனர். அவர்கள் ஆவணங்கள் அனைத்தையும் ஆய்வு செய்து விட்டு இன்னும் ஒரு சில தினங்களில் தங்கள் பாணியில் விசாரணையை தொடங்க உள்ளனர். இதனால் இந்த வழக்கு மீண்டும் பரபரப்பை எட்டும் என தெரிகிறது.