No results found

    Google Tamil News | பிரதமர் மோடியின் போதையில்லா இந்தியா திட்டத்தை நனவாக்க வேண்டும்- அதிகாரிகளுக்கு, அமித்ஷா உத்தரவு


    போதைப்பொருள் கடத்தல் மற்றும் தேசிய பாதுகாப்பு என்ற தலைப்பில் மேற்கு பிராந்திய மாநிலங்களுடனான ஆலோசனை கூட்டம் குஜராத் மாநிலம் காந்தி நகரில் நடைபெற்றது. இதில் குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் கலந்து கொண்டார். ​​கோவா முதல்வர் பிரமோத் சாவந்த், மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், மகாராஷ்டிரா துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் உள்ளிட்டோர் வீடியோ கான்பரன்ஸ் மூலம் பங்கேற்றனர். இந்த கூட்டத்தை தொடங்கி வைத்து பேசிய மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கூறியுள்ளதாவது: போதைப்பொருள் அச்சுறுத்தலுக்கு எதிரான போராட்டத்தில் மகாராஷ்டிரா மற்றும் கோவா அரசுகள் முக்கியமான பங்கு வகிக்க வேண்டும். நாட்டின் மேற்குக் கடற்கரைப் பகுதிகளில் இருந்து ஹெராயின் கடத்தல் அதிகரித்து வருகிறது. அதை தடுத்து நிறுத்த வேண்டும். கடந்த எட்டு ஆண்டுகளில், நாட்டில் 20,000 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பல்வேறு மத்திய அமைப்புகளும், மாநில அரசுகளும் இணைந்து செயல்பட வேண்டும். போதையில்லா இந்தியா என்ற பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையை நாம் நனவாக்க வேண்டும். மத்திய உள்துறை அமைச்சகம் 75 நாட்களில் குறைந்தது 75,000 கிலோ போதைப்பொருட்களை அழிப்பதாக உறுதியளித்தது. ஆனால், நாங்கள் ஏற்கனவே 1,65,000 கிலோ போதைப்பொருட்களை காலக்கெடுவிற்கு முன்பே அழித்துவிட்டோம். நீதிமன்றத்தின் அனுமதி பெற்ற பிறகு இவ்வளவு பெரிய அளவிலான போதைப் பொருள் அழிக்கப்பட்டது ஒரு சாதனை. சர்வதேச போதைப்பொருள் நெட்வொர்க்குகள் சம்பந்தப்பட்ட வழக்குகளை மாநிலங்கள் எந்தத் தயக்கமும் இல்லாமல் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பணியகம் அல்லது தேசிய புலனாய்வு முகமையிடம் ஒப்படைக்க வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்தார். காந்திநகரில் ஆலோசனை கூட்டம் நடந்து கொண்டிருந்த நிலையில், குஜராத் மற்றும் டெல்லியில் இரண்டு இடங்களில் பறிமுதல் செய்யப்பட்ட 12,500 கிலோ போதைப்பொருள் அழிக்கப்பட்டது. மத்திய மந்திரி அமித்ஷா மற்றும் மாநில முதலமைச்சர்கள் இதன் நேரடி ஒளிபரப்பை பார்வையிட்டனர்.

    Previous Next

    نموذج الاتصال