சென்னை தி.நகர் உஸ்மான் சாலை மற்றும் ரங்கநாதன் தெரு ஆகிய இடங்களில் திடீரென ஆக்கிரமிப்பு நடைபாதை கடைகள் பெருகி வருகின்றன. இந்த ஆக்கிரமிப்பு கடைகளால் பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டு உள்ளது. மேலும் தி.நகர் பஸ் நிலையம் முதல் தெற்கு உஸ்மான் சாலை மற்றும் வடக்கு உஸ்மான் சாலையில் இருபுறமும் ஆக்கிரமிக்கப்பட்டு நடைபாதை கடைகள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த நடைபாதை பகுதியில் ஏராளமான தள்ளுவண்டி கடைகள் மற்றும் பழக்கடைகள், வறுகடலை, பொரி கடைகள், பானிபூரி கடைகள், செருப்பு கடைகள் அமைக்கப்பட்டு உள்ளன. இதனால் சாலையோர பகுதிகளில் பொதுமக்கள் நடந்து செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகிறார்கள். மேலும் அங்கு வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. விபத்துக்களும் ஏற்பட்டு வருகின்றன. இந்த ஆக்கிரமிப்பு கடைகளால் தி.நகர் பகுதி முழுவதும் போக்குவரத்து நெரிசலில் திணறி வருகிறது. எனவே இந்த கடைகளை உடனடியாக அகற்ற சென்னை மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தி.நகரில் சாலையோர நடைபாதையில் 'திடீர்' ஆக்கிரமிப்பு கடைகள்- பொதுமக்கள் கடும் அவதி
Tamil News