No results found

    தன்னம்பிக்கையுடன் வாழும் தும்பிக்கை இல்லா குட்டி யானை


    கோவை மாவட்டம் வால்பாறை தேயிலை தோட்டங்களும், வனப்பகுதியும் நிறைந்த பகுதியாகும். வனத்தையொட்டி இருப்பதால் வனவிலங்குகள் அடிக்கடி வெளியேறி ஊருக்குள் புகுந்து வருவது வாடிக்கையாக உள்ளது. குறிப்பாக காட்டு யானைகள் அவ்வப்போது வந்து செல்கின்றன.

    வால்பாறை அருகே உள்ள கேரள மாநிலம் அதிரப்பள்ளி வனப்பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு காட்டு யானைகள் சுற்றி திரிந்தன.

    அப்போது அந்த யானைகளுடன் ஒரு குட்டி யானையும் இருந்தது. அந்த குட்டியானைக்கு தும்பிக்கை இல்லாமல் இருந்தது.

    இதை பார்த்த வனத்துறையினர் அதிர்ச்சியடைந்தனர். குட்டி யானை தண்ணீர் குடிக்க சென்ற போது, அங்கிருந்த முதலை, குட்டி யானையை தாக்கி இருக்கலாம் என்றும், அதில் தும்பிக்கையை இழந்திருக்கலாம் எனவும் வனத்துறையினருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

    இதையடுத்து அந்த குட்டி யானையை பிடித்து சிகிச்சை அளிப்பதற்காக வனத்துறையினர் தேடினர். ஆனால் நீண்ட நாட்களாக அந்த குட்டி யானையை பார்க்க முடியவில்லை. தொடர்ந்து வனத்துறையினர் தேடும் பணியை தீவிரப்படுத்தினர்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி அருகே உள்ள சாலையில் வழக்கம் போல சுற்றுலா வாகனங்கள் சென்று கொண்டிருந்தன.

    அந்த சமயம் அந்த சாலையை யானை கூட்டம் கடந்தது. அப்போது அதில் தும்பிக்கை இல்லாத குட்டி யானை ஒன்றும் நடந்து சென்றது.

    அதனை பார்த்ததும் சுற்றுலா பயணிகள் ஆச்சரியம் அடைந்தனர். தும்பிக்கை இல்லாமல் தன் தாயுடன் தன்னம்பிக்கையுடன் வாழும் குட்டி யானையை கண்டு சுற்றுலா பயணிகள் நெகிழ்ச்சி அடைந்தனர்.

    மேலும் அந்த யானையை வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தனர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    Previous Next

    نموذج الاتصال