No results found

    குழந்தை கடத்தல் வதந்திகளை நம்ப வேண்டாம்: சென்னை காவல் ஆணையர்


    குழந்தை கடத்தல் தொடர்பான வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்றும் குழந்தை கடத்தல் குறித்து தேவையற்ற வதந்திகளை யாரும் பகிர வேண்டாம் என சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் கோரிக்கை விடுத்துள்ளார்.

    தமிழ்நாட்டில் குழந்தைகள் கடத்தப்படுவதாகவும், பர்தா அணிந்து பெண் வேடமிட்ட ஆண்கள் சுற்றி வருவதாகவும், இக்கடத்தலுக்காக வடமாநிலங்களில் இருந்து 400 பேர் தமிழகத்தில் குவிந்துள்ளதாகவும், கடத்தப்படும் சிறுவர், சிறுமிகளின் உடல் உறுப்புகளை ஒரு கும்பல் எடுப்பதாக கூறப்படும் தகவல்கள் கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் அதிவேகமாக பரவி வருகின்றன

    இதற்கு காவல்துறை சார்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. மேலும், குழந்தைகள் கடத்தல் என்ற வதந்திகளை பரப்புபவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், சென்னை ராமாபுரத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் சைபர் கிரைம் குறித்த ஹேக்கத்தான் போட்டி நடைபெற்றது. இதன் நிறைவு விழாவில் சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளையும் சான்றுகளையும் வழங்கினார்.

    பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், "சைபர் கிரைம் குற்றங்களை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வரப்பட்டிருக்கிறது. அந்த வகையில் இதுபோன்ற ஹேக்கத்தான் போட்டிகளில் பல்வேறு தொழில்நுட்பங்களையும் யுக்திகளையும் கண்டுபிடித்து வருகின்றனர். அவை விரைவில் நடைமுறைக்கு கொண்டு வரப்படும். குழந்தை கடத்தல் தொடர்பான தகவல்கள் வெளியாவது உண்மை இல்லை. இது குறித்து முழுமையாக விசாரணை நடத்தப்பட்டுவிட்டது. தேவையற்ற வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம். அதே போல் உண்மையில்லாத தகவல்களை யாரும் பகிர வேண்டாம்." என்று அவர் தெரிவித்தார்.

    Previous Next

    نموذج الاتصال