No results found

    ரயில் விபத்தை தடுத்த தம்பதிக்கு ரூ.1 லட்சம் வெகுமதி வழங்கினார் உதயநிதி ஸ்டாலின்


    ரயிலை நிறுத்தி பெரும் விபத்தை தவிர்த்த புளியரையைச் சேர்ந்த சண்முகையா-வடக்குத்தியாள் தம்பதியை நேரில் அழைத்து பாராட்டிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், திமுக இளைஞரணி அறக்கட்டளை சார்பில் ₹1 லட்சம் வெகுமதி வழங்கினார்.

    இதற்கு முன்னதாக, சண்முகையா - வடக்குத்தியாள் தம்பதியினரின் வீரதீர செயலை பாராட்டி முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ரூ. 5 லட்சம் வெகுமதி வழங்கினார்

    தென்காசி மாவட்டம் செங்கோட்டை வட்டம் புளியரை கிராமம் 'எஸ்' - வளைவு என்ற தமிழக-கேரள எல்லைப் பகுதியில், 25-2-2024 அன்று நள்ளிரவு 1.00 மணி அளவில் திருமங்கலம்-கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் சென்ற லாரி ஒன்று நிலை தடுமாறி 40 அடி உயரத்திலிருந்து கவிழ்ந்து கீழே செல்லும் செங்கோட்டை -கொல்லம் ரயில் மார்க்கத்திலுள்ள தண்டவாளத்தில் விழுந்து விபத்து ஏற்பட்டது.

    அப்போது அப்பகுதியில் வசித்து வந்த தம்பதியர் சண்முகையா- வடக்குத்தியாள் தம்பதியினர் செங்கோட்டையிலிருந்து புனலூர் நோக்கி வந்து கொண்டிருந்த பகவதியம்மன் கோவில் திருவிழா சிறப்பு பயணிகள் ரயில் வரும் சத்தத்தைக் கேட்டு நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து, தண்டவாளத்தில் சிறிது தூரம் ஓடிச்சென்று கையில் வைத்திருந்த டார்ச் லைட் ஒளியின் மூலம் ரயில் ஓட்டுநரிடம் சைகை காண்பித்து, ரயிலை நிறுத்தி ஏற்படவிருந்த பெரும் ரயில் விபத்தை தடுத்துள்ளனர்.

    உடனடியாகத் தகவலறிந்து காவல் துறையினர், தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து பொதுமக்களுடன் இணைந்து தண்டவாளத்தில் விழுந்து கிடந்த லாரியினை அப்புறப்படுத்தியுள்ளனர். மேலும் சென்னையிலிருந்து கொல்லம் நோக்கிச் சென்ற விரைவு ரயிலும் செங்கோட்டை ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது.


    Previous Next

    نموذج الاتصال