பிரதமர் மோடி இன்றும், நாளையும் தமிழகத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.
இன்று பல்லடத்தில் அண்ணாமலையின் என் மண் என் மக்கள் யாத்திரை நிறைவு விழாவில் கலந்து கொண்டு பேசுகிறார். இரவு மதுரையிலும், நாளை தூத்துக்குடி, நெல்லையிலும் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.
தமிழகத்தின் மேற்கு மற்றும் தெற்கு பகுதிகளில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் செய்யும் மோடி மீண்டும் 5 நாட்களில் தமிழகத்துக்கு வருகிறார்.
அதாவது வருகிற 4-ந்தேதி தேர்தல் பிரசாரத்துக்காக சென்னை வருகிறார். நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில் பிரமாண்ட பொதுக்கூட்டத்துக்கு பா.ஜனதாவினர் ஏற்பாடு செய்து வருகிறார்கள்.
அன்று பிற்பகலில் சென்னை விமான நிலையத்துக்கு வரும் பிரதமர் மோடி அங்கிருந்து ஹெலிகாப்டரில் நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலுக்கு வருகிறார். இதற்காக ஹெலிகாப்டர் தளம் அமைக்கப்படுகிறது. மாலை 3 மணியளவில் நடைபெறும் பிரமாண்ட தேர்தல் பிரசார கூட்டத்தில் உரையாற்றுகிறார்.
வேண்டும் மோடி. மீண்டும் மோடி என்பது பா.ஜனதாவினரின் கோஷம். அதை போலவே மோடி மீண்டும் மீண்டும் தமிழகத்துக்கு வருவது பா.ஜனதாவினர் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. அதேநேரம் அரசியல் களத்தை கலகலக்க வைத்துள்ளது.
இந்த தேர்தலில் தமிழகத்திலும் சில தொகுதிகளை கைப்பற்ற முடியும் என்று திட்டமிட்டு இருப்பதால் மோடியே நேரடியாக களத்தில் இறங்கி இருப்பது மக்களின் மனங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் தெரிகிறது.
பிரதமர் மோடியின் வருகை மற்றும் பொதுக்கூட்டத்துக்கு ஏராளமான பொது மக்களை திரட்டுவது, வரவேற்பு ஏற்பாடுகள் செய்வது பற்றி சென்னை பெருங்கோட்ட பொறுப்பாளர் கரு.நாகராஜன் தலைமையில் நாளை மாலையில் அமைந்தகரை அய்யாவு மகாலில் ஆலோசனை கூட்டம் நடக்கிறது.