No results found

    இரவு நேரங்களில் ஓட்டல்கள் செயல்பட அனுமதிக்க வேண்டும்- அரசுக்கு உரிமையாளர்கள் கோரிக்கை


    தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்கு பிறகு ஓட்டல்களில் இரவு 11 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படுகிறது. சென்னை போன்ற பெருநகரங்களில் 24 மணி நேரமும் செயல்பட மத்திய அரசு வழிவகை செய்து உள்ளது.

    இரவு நேரங்களில் முழுமையாக ஓட்டல்கள் செயல்பட அனுமதி இருந்தும் கூட ஒரு சில பகுதிகளில் போலீசார் கட்டுப்பாடுகளை விதிப்பதாக ஓட்டல் உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

    10-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் முறையான உரிமம் பெற்ற உணவகங்கள் தடையின்றி செயல்படலாம் என்று அரசு உத்தரவு பிறப்பித்த போதிலும் இரவு 11 மணிக்கு மேல் மூடுமாறு போலீசார் கூறுகின்றனர்.

    இதுகுறித்து சென்னை ஓட்டல்கள் சங்க தலைவர் எம்.ரவி கூறுகையில், "சென்னை நகரில் ஒரு சில பகுதிகளில் இரவு 11 மணிக்கு மேல் கடைகளை மூடச்சொல்லி போலீசார் கூறுகிறார்கள். நள்ளிரவு நேரத்தில் சென்னை நகருக்குள் வருபவர்கள் ஒரு கப் காபி அல்லது லேசான டிபன் சாப்பிட விரும்புகிறார்கள்.

    இதுபோன்ற சூழலில் ஓட்டல் இல்லாமல் பாதிக்கப்படுகிறார்கள். எனவே போலீஸ் தொந்தரவு இல்லாமல் தொழில் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

    சங்க செயலாளர் பேராசிரியர் ராஜ்குமார் கூறியதாவது:-

    ஐ.டி. நிறுவனங்கள், விமான நிலையம், கிளாம்பாக்கம் பஸ் நிலையம், கோயம்பேடு பஸ் நிலையம், சென்ட்ரல், எழும்பூர் போன்ற பகுதிகளுக்கு அதிகாலை வரை மக்கள் பயணமாகி கொண்டே இருக்கின்றனர்.

    இதுதவிர பெரிய மருத்துவமனைகளுக்கு மக்கள் செல்கிறார்கள். பஸ், ரெயில் நிலையங்கள் மட்டுமின்றி மற்ற முக்கிய பகுதிகளில் 24 மணி நேரமும் உணவகங்கள் திறந்து இருந்தால்தான் அரசுக்கு, மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரிகளை முறையாக செலுத்த முடியும். தொழில் செய்யவிடாமல் தடுத்தால் எப்படி வரி கட்டுவது.

    எனவே போலீஸ் இடையூறு இருக்கக் கூடாது. சட்டம்-ஒழுங்கு பிரச்சினையை காரணம் காட்டி ஓட்டல்களை மூடச் சொல்வது இத்தொழிலை நசுக்குவதற்கு சமமாகும். டீக்கடைகள், ஓட்டல்கள் அதிகாலையில் திறந்தால் தான் வியாபாரம் செய்ய முடியும் என்றார்.

    இதற்கிடையே இரவு 11 மணிக்கு மேல் அண்ணா சாலை உள்ளிட்ட சில இடங்களில் ஓட்டல்கள் செயல்படுவதால் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படுவதாக குடியிருப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.

    Previous Next

    نموذج الاتصال