பலன்: விதியை வெல்வோம்
தங்குவார் கற்பக தருவின் நிழலில், தாயார் இன்றி
மங்குவார், மண்ணில் வழுவாப் பிறவியை, மால் வரையும் ,
பொங்குவார் ஆழியும், ஈரேழ் புவனமும், பூத்த உந்திக்
கொங்குவார் பூங்குழலாள் திருமேனி குறித்தவரே
பொருள்:
மால் வரையும் - பெரிய மலை
பொங்குவார் ஆழி - நுரை ததும்பும் அலைகள் உடைய கடல்
ஈரேழ் புவனம் - 2 x 7 = 14 உலகங்கள்
பெரிய மலை, அலை கடல், 14 லோகங்கள் ஆகியவற்றை பெற்ற தாய் அபிராமி.
பூத்த உந்திக் கொங்குவார் பூங்குழலாள் - அழகிய மலர்களை தன் தலையில் சூடியுள்ளாள். அதனால்அபிராமி அன்னை, பூங்குழலாள் என்று அழைக்கப்படுகிறாள். பூக்களை சூடியதால், வண்டுகள் அம்பாளின் தலையில் மேய்கின்றன. அம்பாளின் கூந்தலே வாசம் உள்ளதால் அந்த கூந்தலை வண்டுகள், மலர் என்று நினைத்துக்கொள்கின்றன போலும்.
மட்டுவார்க்குழலி (சுகந்தி குந்தலாம்பாள்) என்று திருச்சிராப்பள்ளியில் அம்பாளுக்கு பெயர்.
திருப்பாம்புரம் என்ற ஸ்தலத்தில், அம்பாளுக்கு வண்டார்க்குழலி என்று பெயர்.
மா மலைகள், அலைக்கடல்கள், 14 உலகங்கள் போன்றவற்றை படைத்தவளும், வாசம் மிகு மலர்களை கூந்தலில் சூடியவளுமான அன்னையின் திருமேனியை நினைப்போர், அடையும் இடம், கற்பக வ்ருக்ஷத்தின் நிழல். அவர்கள் பூமியில் மீண்டும் பிறவா வரம் பெறுவார்.
*(தாயார் இன்றி மங்குவார், மண்ணில் வழுவாப் பிறவியை) தேக மாதா அவர்களுக்கு இனி கிடையாது, மீண்டும் தாயின் வயிற்றில் பிறக்க மாட்டார்.
பாடல் (ராகம் - பிலஹரி, தாளம் -ஆதி திஸ்ர நடை) கேட்க