தமிழகத்தில் தற்போது புறநகர் செல்லும் புதிய பஸ்கள் நீல நிறத்திலும், நகர, மாநகர பஸ்கள் பெரும்பாலும் சிவப்பு நிறத்திலும் இயக்கப்படுகின்றன.
அதிலும் பெண்களுக்கு கட்டணமில்லா சேவை வழங்கும் பஸ்களை அடையாளம் காணும் வகையில் முன், பின் பக்கங்களில் இளஞ்சிவப்பு (பிங்க்) வண்ணத்துடன் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் அரசு போக்குவரத்து கழகத்துக்கு 1000 புதிய பஸ்களை வாங்கவும், 500 பழைய பஸ்களை புதுப்பிக்கவும் ரூ.500 கோடி ஒதுக்கப்பட்டது.
அதன்படி அடிச்சட்டம் நல்ல நிலையில் இயக்கத்தில் உள்ள பஸ்கள் தற்போது புதுப்பிக்கப்பட்டு அவற்றுக்கு மஞ்சள் நிறம் அடிக்கப்பட்டது.
நிறம் மட்டுமின்றி, பஸ்களின் இருக்கை, அமரும் வசதி போன்றவையும் விரிவாக இருக்கும் வகையில் திட்டமிடப்பட்டு புதுப்பிக்கப்பட்டது.
இந்நிலையில் தமிழ்நாடு போக்குவரத்துக்கழகம் சார்பில் நவீன வசதிகளுடன் சீரமைக்கப்பட்ட 100 மஞ்சள் நிற பஸ்களை மக்கள் பயன்பாட்டிற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.